50 ஆண்டுகளுக்கு பிறகு மாடக்குளம் கண்மாய் நிரம்புகிறது

தொடர் மழை காரணமாக 50 ஆண்டுகளுக்கு பிறகு மாடக்குளம் கண்மாய் நிரம்புகிறது. மூங்கில் கம்பு நட்டு பாரம்பரிய விழாவாக கிராம மக்கள் கொண்டாடினார்கள்.

Update: 2021-11-29 20:42 GMT
மதுரை, 

தொடர் மழை காரணமாக 50 ஆண்டுகளுக்கு பிறகு மாடக்குளம் கண்மாய் நிரம்புகிறது. மூங்கில் கம்பு நட்டு பாரம்பரிய விழாவாக கிராம மக்கள் கொண்டாடினார்கள்.

மாடக்குளம் கண்மாய்

மதுரை மாநகருக்கு உட்பட்ட மாடக்குளம் பகுதியில் 680 ஏக்கர் பரப்பளவில் 5.44 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்மாய் உள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய கண்மாய்களில் இந்த கண்மாயும் ஒன்று. வரலாற்று சிறப்புகள் பலவற்றைக் கொண்டுள்ள இந்த கண்மாய் தற்போது முழு கொள்ளளவை வெகுவிரைவில் எட்ட உள்ளது. சுமார் 2 ஆயிரத்து 583 ஏக்கர் பாசன நிலம் உள்ள இந்த கண்மாயில் மூன்று மதகுகளும் ஒரு மறுகால் வாய்க்காலும் இருக்கிறது. இது 3,400 மீட்டர் நீளம் கொண்டது. மதுரை நகர் பகுதியில் உள்ள மாடக்குளம், பழங்காநத்தம், மகபூப்பாளையம், எல்லீஸ்நகர் என பல்வேறு பகுதிகளுக்கும் நீர் ஆதரமாக விளங்குகிறது. இந்த கண்மாய்க்கு வைகை ஆற்றிலிருந்து வரக்கூடிய நீரை வாய்க்கால்கள் மூலமாக கொண்டு வரப்பட்டு நிரப்பப்படும், இந்நிலையில் வடகிழக்கு பருவமழை அதிக அளவிற்கு பெய்துள்ளதால் வைகை அணை முழுக்கொள்ளளவை எட்ட உள்ளது. அதன் காரணமாக வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் வைகை ஆற்றிலிருந்து மாடக்குளம் கண்மாய்க்கு பிரதான கால்வாய்கள் மூலம் கொண்டுவரப்பட்டது.

பாரம்பரிய விழா

 இந்த நிலையில் 50 ஆண்டுகளுக்கு பின் கண்மாய் முழு அளவை எட்ட உள்ளதை அடையாளப்படுத்தும் குத்துக்கல்கள் தண்ணீரில் மூழ்கியது. இதனையடுத்து மாடக்குளம் கண்மாயின் கரையில் அமைந்து உள்ள அய்யனார் கோவிலில் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பாரம்பரிய முறைப்படி குத்துக்கல் மீது மூங்கில் கம்பை நடும் விழா நேற்று நடைபெற்றது.
கண்மாய் முழுமையாக நிரம்புவதை கொண்டாடும் வகையில் கிராம மரபுவழி மடை வேலைபார்க்கும் குடும்பத்தினர் கண்மாய் கரையில் இருந்து தண்ணீரில் நீந்தியபடி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட 2 மூங்கில் கம்புகளை எடுத்து சென்று குத்துக்கல் மீது நட்டு வைத்தனர்.
குலவையிட்டனர்
இந்த நிகழ்வின்போது கரையோரம் நின்றிருந்த பெண்கள் மகிழ்ச்சியில் குலவையிட்டனர், பாதுகாப்பு கருதி பைபர் பரிசல் ஒன்றை ஏற்பாடு செய்து இந்த நிகழ்வுக்கு பயன்படுத்தினர். இதில் பொதுப்பணித்துறை அதிகாரிகளும், கிராம மரியாதைதாரர்கள் மற்றும் பெரியோர்கள் கலந்துகொண்டனர். இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறும் போது, தற்போது கண்மாய் நடுவில் உள்ள குத்துக்கல் நீர் நிரம்பி உள்ளது. அதன் மீது பூஜை செய்து நடப்பட்ட மூங்கில் கம்புகளும் நீரில் மூழ்கி விட்டால் கண்மாய் பாதுகாப்பு கருதி மதகுகள் வழியாக தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்யப்படும். இதற்காக தான் இந்த மூங்கில் கம்புகள் நடப்பட்டு உள்ளன என்றனர்.
50 ஆண்டுகளுக்கு பின்பு கடல்போன்று நீர் நிரம்பி காட்சியளித்த கண்மாய் முன்பு நின்று ஏராளமானோர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மாடக்குளம் கண்மாயில் நீர் நிறைந்துள்ளதால் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து உள்ளது.

மேலும் செய்திகள்