பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு காரில் கடத்தப்பட்ட ரூ.3 லட்சம் குட்கா பறிமுதல் 2 பேர் கைது

பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு காரில் கடத்தி வரப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான குட்காவை போலீசார் பறிமுதல் செய்ததுடன், 2 பேரை கைது செய்தனர்.

Update: 2021-11-29 20:21 GMT
கருப்பூர்,
குட்கா கடத்தல்
சேலம் கருப்பூர் அருகே உள்ள சுங்கச்சாவடியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கருப்பூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூபதி, நெடுஞ்சாலை ரோந்து படை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் அசோகன், அர்த்தநாரி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் வந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர்.
இதில் சந்தேகமடைந்த போலீசார் காரை தனியாக நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் 25 மூட்டைகளில் இருப்பதை கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான குட்கா மூட்டைகளுடன் அந்த காரை கருப்பூர் போலீஸ் நிலையத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.
2 பேர் கைது
இதையடுத்து காரில் வந்த 2 பேரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் கர்நாடக மாநிலம் மைசூரு வாட்டர் சப்ளை நகர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் (வயது 27), மைசூரு ராகவேந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த டிரைவர் அருண் (26) என்பதும் தெரியவந்தது.
பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு குட்கா கடத்தல் தொடர்பாக கருப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து ஸ்ரீகாந்த், டிரைவர் அருண் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான குட்கா மற்றும் அவர்கள் வந்த காரை போலீசார் பறிமுதல் செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்