நகைகளை கொள்ளையடித்த மர்மநபர்கள் தப்பிச்சென்ற கார் சிக்கியது
நகைக்கடை அதிபர் வீட்டில் நகைகளை கொள்ளையடித்த மர்மநபர்கள் தப்பிச்சென்ற கார் சிக்கியது.
பெரம்பலூர்:
103¼ பவுன் நகை கொள்ளை
பெரம்பலூர் சர்ச் ரோட்டை சேர்ந்த நகைக்கடை அதிபர் கருப்பண்ணனின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி அவரது வீட்டில் இருந்த 103¼ பவுன் நகை, 9 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.10 ஆயிரம் மற்றும் காரை, முகமூடி அணிந்து வந்த 3 மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை பிடிக்க 5 தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அருகே ஆலம்பாடி செல்லும் சாலையில் 2-வது வார்டு இந்திரா நகரில் ஒரு கார் சந்தேகப்படும்படியாக நின்றதை போலீசார் கண்டனர். விசாரணையில் அந்த கார், மர்மநபர்கள் தப்பிச்சென்ற கருப்பண்ணனின் கார் என்பது தெரியவந்தது. மேலும் அந்த காரிலேயே சாவி இருந்தது. இது பற்றி பொதுமக்களிடம் போலீசார் விசாரித்ததில், அந்த கார் கடந்த 3 நாட்களாக நிற்பதாகவும், அரசு மருத்துவமனைக்கு வந்திருப்பவர்களில் யாரோ விட்டு சென்றிருக்கலாம் என்று நினைத்ததாகவும் தெரிவித்தனர்.
விசாரணை
இதற்கிடையே கைரேகை நிபுணர்கள் வந்து காரில் தடயங்களை சேகரித்தனர். இதையடுத்து போலீசார் அந்த காரை மீட்டு தண்ணீர்பந்தலில் உள்ள மாவட்ட ஆயுதப்படை போலீஸ் வளாகத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் போலீசார் கார் நின்ற இடத்தின் அருகே உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விசாரிக்கவுள்ளனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களே காரை மட்டும் இரவில் வந்து விட்டுவிட்டு தப்பி சென்றார்களா? அல்லது போலீசாருக்கு குழப்பத்தை ஏற்படுத்த அவர்களது கூட்டாளியிடம் காரை கொடுத்துவிட்டு சென்றார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மர்மநபர்களில் ஒருவர் சிக்கினார்?
கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களில் ஒருவர் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்று போலீசாரால் சந்தேகிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த நபர் தனிப்படை போலீசாரிடம் சிக்கியதாக கூறப்படுகிறது. அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது.