வீட்டின் பூட்டை உடைத்து ரூ.20 ஆயிரம்- வெள்ளி விளக்கு திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து ரூ.20 ஆயிரம்- வெள்ளி விளக்கு திருட்டுபோனது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லபெருமாள். இவரது மனைவி பஞ்சவர்ணம்(வயது 46). செல்லபெருமாள் இறந்து விட்டதால் பஞ்சவர்ணம் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தனது அக்காள் மகளுக்கு குழந்தை பிறந்ததை தொடர்ந்து, அவரை பார்க்க பஞ்சவர்ணம் சென்று விட்டார்.
இந்நிலையில் கடந்த 27-ந்தேதி பஞ்சவர்ணத்தின் மருமகள் வீட்டிற்கு வந்து பார்த்துவிட்டு, வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதையடுத்து பஞ்சவர்ணம் நேற்று முன்தினம் தனது வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த ரூ.20 ஆயிரம் மற்றும் ஒரு வெள்ளி விளக்கு திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.