ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை மீட்க அ.தி.மு.க. சார்பில் மேல்முறையீடு சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேட்டி
ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை மீட்கும் வகையில், கோர்ட்டு உத்தரவுக்கு எதிராக அ.தி.மு.க. சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்று சேலத்தில் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சேலம்
எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க. சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறும் நிகழ்ச்சி சேலம் மாநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்றது.
இதையடுத்து முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று விருப்ப மனுக்கள் பெறும் நிகழ்ச்சியை பார்வையிட்டு அ.தி.மு.க.வினரிடம் விருப்ப மனுக்களை பெற்றார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அம்மா உணவகம்
ஏழை, எளிய மக்கள் வயிறார உண்ண வேண்டும் என்பதற்காக மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அம்மா உணவகத்தை கொண்டு வந்தார். இதை முடக்க தி.மு.க. அரசு பல்வேறு வகையில் முயற்சி செய்தது. முதலில் உணவகத்தில் வழங்கப்பட்ட பொருட்கள் மற்றும் பணியாளர்களை குறைத்தார்கள். பணியாளர்களின் சம்பளம் குறைக்கப்பட்டது. இது கண்டிக்கத்தக்கது.
அம்மா உணவகம் செயல்பட்ட காரணத்தால் முதல் கட்ட கொரோனா பரவல் காலத்தில் ஒரு நாளைக்கு 7 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது. எனவே அம்மா உணவகத்தை முடக்க முயற்சிப்பதற்கு பதிலாக அதனை தி.மு.க. அரசு சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.
வீடுகள் தரை மட்டம்
சேலம் கருங்கல்பட்டி பகுதியில் எரிவாயு சிலிண்டர் வெடித்த இடத்தில் 47 பேர் வசித்து உள்ளனர். விபத்தில் 6 பேர் இறந்து விட்டார்கள். 17 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 7 வீடுகள் தரை மட்டமாகி உள்ளன. கடன் வாங்கித்தான் அவர்கள் வீடு கட்டி உள்ளனர்.
எனவே பாதிக்கப்பட்ட 7 குடும்பத்தினருக்கு அரசு வீடு கட்டித்தர வேண்டும். அதுவரை அவர்கள் தங்குவதற்கு தற்காலிகமாக இட வசதி செய்து கொடுக்க வேண்டும். இறந்தவர்களுக்கு அரசு ரூ.5 லட்சம் வழங்கி உள்ளது. இதை ரூ.15 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். அதே போன்று படுகாயம் அடைந்த வர்களுக்கு ரூ.2 லட்சம், சாதாரண காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்க வேண்டும்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்பதற்கு தி.மு.க.விற்கு தகுதி இல்லை. கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த காலத்தில் 7 பேர் நிலை குறித்து கோரிக்கை வைத்த போது அமைச்சரவை கூட்டப்பட்டது. அதில் நளினிக்கு குழந்தை உள்ளதால் அவரது தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கலாம். மற்றவர்களுக்கு கோர்ட்டு அளித்த தீர்ப்பை நிறைவேற்றலாம் என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள்.
கண்டிக்கத்தக்கது
நான் (எடப்பாடி பழனிசாமி) முதல்-அமைச்சராக இருந்தபோது அவரது குடும்பத்தினர், நாட்டு மக்கள் வைத்த கோரிக்கையின்படி அமைச்சரவை கூட்டப்பட்டு 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று கவர்னருக்கு கடிதம் அனுப்பி வைத்தோம். அந்த கோப்பு நிலுவையில் உள்ளது. எனவே இந்த பிரச்சினையில் இப்போது தி.மு.க. அரசு இரட்டை வேடம் போடுகிறது. இப்போது அரசியல் ஆதாயம் தேட மு.க.ஸ்டாலின் நாடகமாடி கொண்டிருக்கிறார்.
கரூரில் அ.தி.மு.க. மாவட்ட கவுன்சிலர்கள் மீது வழக்கு தொடர்ந்து, அச்சுறுத்தி தி.மு.க.வில் சேர்க்கப்படுகிறார்கள். உள்ளாட்சி பிரதிநிதிகளை மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஏதாவது தொழில் செய்தால் அவர்களை மிரட்டி கட்சியில் சேர்க்கிறார்கள். இது போன்று ஆள் சேர்க்கும் நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளார். நேரடியாக அரசியல் களத்தில் சந்திக்க முடியாத, திராணியற்ற கட்சி தி.மு.க.
அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது அனைவருக்கும் ஜனநாயக முறைப்படி மதிப்பு அளித்தோம். ஆனால் வேண்டும் என்றே திட்டமிட்டு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கரூர் மாவட்டத்தில் அடாவடித்தனமாக செயல்பட்டு கொண்டிருக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
வேதா இல்லம்
பொது மக்கள் பார்வையிடுவதற்காக ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் அரசுடைமையாக்கப்பட்டது. தற்போது கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பு தொண்டர்களுக்கு வேதனையை அளித்துள்ளது. வருகிற 1-ந்தேதி அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் நடக்கிறது. அதில் வேதா இல்லத்தை மீட்க மேல்முறையீடு செய்ய முடிவு எடுப்போம். எனவே நிச்சயமாக ஜெயலலிதா வாழ்ந்த கோவிலை மீட்டெடுப்போம். அ.தி.மு.க. ஜனநாயக கட்சி. தி.மு.க. போன்று வாரிசு கட்சி கிடையாது.
மழை, வெள்ள சேதம் குறித்து அரசு கணக்கெடுத்து மத்திய அரசிடம் முதல் கட்டமாக நிதி கேட்டு உள்ளது. இந்த நிலையில் தற்போது மீண்டும் மழை பெய்து கொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை நின்ற பிறகு மழை வெள்ள சேதம் குறித்து அரசு கணக்கெடுக்கும். அதன்படி எவ்வளவு நிதி கேட்டு மத்திய அரசிடம், தமிழக அரசு கோருகிறேதோ அந்த தொகையை விடுவிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை வைப்போம். காவிரி டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் அமைப்பு செயலாளர் செம்மலை, மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம், அவைத்தலைவர் பன்னீர்செல்வம், பாலசுப்பிரமணியன் எம்.எல்.ஏ., பொருளாளர் பங்க் வெங்கடாசலம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செல்வராஜ், சக்திவேல், சேலம் நகர கூட்டுறவு வங்கி தலைவர் வேபிரிட்ஜ் ராஜேந்திரன், அம்மாபேட்டை கூட்டுறவு வங்கி தலைவர் யாதவமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.