ஒமிக்ரான் கொரோனா பரவாமல் தடுக்க வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் கலெக்டர் ஸ்ரேயா சிங் வேண்டுகோள்

ஒமிக்ரான் கொரோனா பரவாமல் தடுக்க வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் கலெக்டர் ஸ்ரேயா சிங் வேண்டுகோள்

Update: 2021-11-29 19:23 GMT
நாமக்கல்:
ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கடந்த 2 வாரங்களில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தாமாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என கலெக்டர் ஸ்ரேயா சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆலோசனை கூட்டம்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், புதிதாக உருவாகி உள்ள ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நேற்று கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயா சிங் பேசும்போது கூறியதாவது:-
தற்போது பல்வேறு நாடுகளில் உருமாறிய புதிய வகை ஒமிக்ரான் கொரோனா வைரஸ் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இது மிக விரைவாக பரவும் வகையிலானது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. நாமக்கல் மாவட்டம் பல்வேறு மாநிலங்களுடன் தொடர்புடைய தொழில்கள் நடைபெறும் மாவட்டமாகும். எனவே வெளி மாநிலங்களுக்கு சென்று வருவோர் மிகவும் பாதுகாப்பாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கொரோனா பரிசோதனை
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா முதல் அலையின் போது உயிரிழப்புகள் பெரிய அளவில் இல்லை. அதன் காரணமாக பொதுமக்கள் முககவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது ஆகியவற்றில் சுணக்கம் காட்டியதன் காரணமாக 2-ம் அலையின் போது அதிக அளவில் உயிரிழப்பு ஏற்பட்டது.
மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி நமது மாநிலத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதில் கொரோனா தொற்று இல்லை என்றால் அவர்கள் தங்கள் வீட்டிலேயே ஒருவார காலம் தனிமைப்படுத்திக் கொண்டு 8-வது நாள் மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். விமான நிலைய பரிசோதனையில் கொரோனா பாதிப்பு உறுதியானோர் உடனடியாக சிறப்பு முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்கள் உருமாறிய ஒமிக்ரான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனரா? என கண்டறியப்படும்.
தடுப்பூசி
இந்த புதிய வகை ஒமிக்ரான் கொரோனா வைரசின் வீரிய தன்மை அதிகமாக இருப்பதால், நம் நாட்டில் பரவும் பட்சத்தில் மிக அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது. அதிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் அவர்களிடையே தீவிர நோய் தொற்று பாதிப்பும், உயிரிழப்பும் அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே நாமக்கல் மாவட்டத்தில் இன்னும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மக்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.
கடந்த இரு வாரங்களில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் அனைவரும் தாமாக முன்வந்து அருகில் உள்ள அரசு சுகாதார மையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மேலும், இது தொடர்பாக சந்தேகங்கள் மற்றும் புகார்கள் அளிக்க மாவட்ட கொரோனா கட்டுப்பாட்டு எண்ணை அழைக்கலாம். 
அபராதம்
வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளாட்சி நிர்வாகங்களின் அலுவலர்கள் தங்கள் பகுதியில் தனிமனித இடைவெளி, முககவசம் அணிதல் உள்ளிட்ட அரசின் வழிகாட்டி நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பதை முறையாக கண்காணித்து, பின்பற்றாதவர்கள் மீது அபராதம் விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், இணை இயக்குனர் (மருத்துவப்பணிகள்) ராஜ்மோகன், துணை இயக்குனர் (சுகாதாரம்) பிரபாகரன், உதவி கலெக்டர்கள் மஞ்சுளா, இளவரசி, தனி தாசில்தார் (பேரிடர் மேலாண்மை) பச்சைமுத்து மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்