ஒரே இரவில் 7 முறை ஏற்பட்ட நிலநடுக்கம். ீடுகளில் விரிசல், பாத்திரங்கள் உருண்டன
குடியாத்தம் அருகே நேற்று முன்தினம் ஒரேநாள் இரவில் 7 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது பாத்திரங்கள் உருண்டு விழுந்தன. கட்டில், பீரோக்கள் நகர்ந்தது. கட்டிடங்களில் விரிசலும் ஏற்பட்டுள்ளது.
குடியாத்தம்
குடியாத்தம் அருகே நேற்று முன்தினம் ஒரேநாள் இரவில் 7 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது பாத்திரங்கள் உருண்டு விழுந்தன. கட்டில், பீரோக்கள் நகர்ந்தது. கட்டிடங்களில் விரிசலும் ஏற்பட்டுள்ளது.
நள்ளிரவில் நிலநடுக்கம்
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த தட்டப்பாறை ஊராட்சி மீனூர் கொல்லைமேடு கிராம பகுதியில் சுமார் 300 வீடுகள் உள்ளன. இங்கு வசிக்கும் பொதுமக்கள் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். அதிகாலை 2.30 மணியளவில் தட்டப்பாறை மீனூர் கொல்லைமேடு பகுதியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் கட்டிடங்கள் அதிர்ந்தன. சில வினாடிகள் இந்்த அதிர்வு நீடித்துள்ளது.
அப்போது வீட்டின் பரண் மீது இருந்த பாத்திரங்கள் உருண்டு கீழே விழுந்தது. பீரோக்கள், கட்டில்கள் சில அங்குலங்கள் நகர்ந்துள்ளது. கால்நடைகள் தொடர்ந்து கத்தியபடி இருந்துள்ளன. மின்விசிறிகள் தாறுமாறாக சுழன்றுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தனர்.
ஒரே இரவில் 7 முறை
நில நடுக்கம் நின்ற நிலையில், பின்னர் சில விநாடிகளுக்கு பின் மீண்டும், மீண்டும் என 7 முறை நில நடுக்கம் ஏற்பட்டது. இரண்டு முறை சுமார் 3 வினாடிகள் வரை நில நடுக்கம் நீடித்தது. அப்போது சத்தத்துடன் நிலநடுக்கம் இருந்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
நிலநடுக்கம் நின்ற பின்னர் பொதுமக்கள் தங்கள் வீடுகளை பார்த்தபோது பல வீடுகளில் பெரிய அளவில் விரிசல்கள் ஏற்பட்டு இருந்தன. 5 வீடுகளில் சிறு சிறு விரிசல்கள் இருந்தன. குறிப்பாக லதா, சாமிநாதன், நாகரத்தினம் ஆகிய 3 பேரின் வீடுகளில் பல இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டிருந்தது.
இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:-
இரவு என்றாலே பயமாக இருக்கிறது
நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்தோம். அப்போது திடீரென வீடு குலுங்கியது போன்று இருந்தது. பாத்திரங்கள் உருண்டு விழுந்தன. கட்டிலும் அதிர்ந்தது. இதனால் அதிர்ச்சியடைந்து வீட்டைவிட்டு வெளியே வந்துவிட்டோம். அதன் பிறகுதான் நிலநடுக்கம் ஏற்பட்டது தெரிந்தது.
கடந்த அக்டோபர் மாதம் ஒரே வாரத்தில் இரண்டு முறை நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரம் என்றாலே வீட்டில் தூங்குவதற்கு பயமாக இருக்கிறது.
இது குறித்து வருவாய்த் துறையினரும், அதிகாரிகளும் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு வருங்காலங்களில் மிகப்பெரிய அளவில் இப்பகுதியில் நில நடுக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதா? என்பதை கண்டறிந்து பொதுமக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்றனர்.
நிலநடுக்கம் ஏற்பட்டு வீடுகளில் விரிசல் ஏற்பட்ட தகவலறிந்ததும் குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன், தாசில்தார் லலிதா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
அதிகாரிகள் ஆய்வு
தொடர்ந்து குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவர் என்.இ. சத்யானந்தம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் யுவராஜ், சாந்தி, முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஏகாம்பரம், கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் நத்தம் பிரதீஷ் உள்ளிட்டோரும் பார்வையிட்டனர்.
பொதுப்பணித்துறையினர், பேரிடர் மேலாண்மை குழுவினர் நேரில் பார்வையிட்டு நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
மீனூர் கொல்லைமேடு கிராமத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட தகவல் காட்டுத்தீ போல் பரவியதால் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அப்பகுதிக்கு சென்று பார்த்த வண்ணம் உள்ளனர்.
ஆம்பூர், வாணியம்பாடி
இதேபோன்று திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டம் அரங்கல்துருகம் மற்றும் காரப்பட்டு கிராமங்களிலும் நேற்று அதிகாலை திடீரென பயங்கர சத்தத்துடன் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை நேரம் என்பதால் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த பொதுமக்கள் பயங்கர சத்தம் மற்றும் நில நடுக்கத்தை உணர்ந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் நின்று கொண்டனர். நிலநடுக்கத்தால் எந்தவித சேதமும் ஏற்படவில்லை. இதனால் சிறிது நேரம் கழித்து பொதுமக்கள் அதிர்ச்சியில் இருந்து மீண்டு தங்கள் வீடுகளுக்கு சென்றனர்.
இதே போல வாணியம்பாடியை அடுத்த சிக்கனாங்குப்பம், தும்பேரி, ராமநாயக்கன்பேட்டை, சென்னாம்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் அதிகாலையில் பொதுமக்கள் தூங்கி கொண்டு இருந்த போது லேசான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அந்த பகுதிகளை சேர்ந்த சுஹேல் அஹமத் மற்றும் சிலர் உணர்ந்ததாக தெரிவித்தனர். இதனால் எந்த பாதிப்பும் இப்பகுதிகளில் ஏற்படவில்லை.
நிலநடுக்கத்தால் பாதிப்பு இல்லை
நில நடுக்கம் குறித்து வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘வேலூரில் இருந்து 59 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு தென் மேற்கு பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் வேலூர் மாவட்டத்தில் பாதிப்பு எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் நிலநடுக்கம் ஏற்பட்டது தொடர்பான வரைபடத்தையும் வெளியிட்டு உள்ளார்.