பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பதில் தொடரும் தாமதம். மாணவர்கள், பெற்றோர்கள் கடும் அவதி

திருப்பத்தூர் மாவட்டத்தில் மழைகாரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பத்தில் தொடரும் காலதாமதம்காரணமாக மாணவர்கள், பெற்றோர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

Update: 2021-11-29 17:53 GMT
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் மழைகாரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பத்தில் தொடரும் காலதாமதம்காரணமாக மாணவர்கள், பெற்றோர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

விடுமுறை அறிவிப்பதில் தாமதம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பல ஏரி, குளங்கள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. கடந்த ஒருவாரம் லேசான மழை பெய்த நிலையில் நேற்று அதிகாலை முதல் மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது. மழையின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் முன்கூட்டியே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. ஆனால் திருப்பத்தூர் மாவட்டத்தில் மட்டும் மாவட்ட நிர்வாகம் முறையாக விடுமுறை அறிவிப்பது இல்லை. இதனால் பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் மிகவும் அவதி படுகின்றனர்.

இந்தநிலையில் நேற்று காலை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து கொண்டு இருந்தது. இருப்பினும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் காலை 7 மணிக்கு திருப்பத்தூர் மாவட்டத்தில் வழக்கம் போல பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு புறப்பட்டனர். நீண்ட தொலைவில் இருந்து செல்லும் மாணவர்களும், தனியார் பள்ளிகளின் வாகனங்களும் வழக்கம்போல புறப்பட்டு விட்டனர். 

மாணவர்கள், பெற்றோர் அவதி

நேரம் செல்ல செல்ல மழை அதிகமாக பெய்ய ஆரம்பித்தது. அதைத்தொடர்ந்து காலை 7.55 மணிக்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 8.07 மணிக்கு கல்லூரிகளுக்கும் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இவ்வாறு மாவட்ட நிர்வாகம் தாமதமாக அறிவித்ததால் பள்ளிக்கூடம் சென்ற மாணவர்கள் பலர் மழையில் நனைந்து கொண்டும், குடை பிடித்து கொண்டும் தங்களது வீடுகளுக்கு திரும்பினர். சில தனியார் பள்ளிகளுக்கு மாணவர்கள் வந்து விட்டதால் வகுப்புகள் நடத்தப்பட்டது.  

ஏற்கனவே கடந்த 18-ந் தேதி பலத்த மழை பெய்த போதும் பள்ளிக்கு விடுமுறை அளிக்காமல் மதியம்தான் மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளித்தது. அப்போது அனைத்து மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். நேற்றும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்தது. தொடர்ந்து இதுபோன்று தாமதமாக விடுமுறை அறிவிக்கப்படுவதால் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மிகவும் அவதி படுகின்றனர். 

எனவே மாவட்ட நிர்வாகம் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு விடுமுறை அறிவித்தால் அதனை முறையாக முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என ஆசிரியர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிளிடம் விசாரித்த போது, மாவட்ட கலெக்டர் ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதனை மாற்றுவது கடினம். நாங்கள் பலமுறை கூறிவிட்டோம். நாங்கள் என்ன செய்ய முடியும். காலை 10.30 மணிக்கு மேல் மழை இல்லை. நாம் எப்படி எடுத்துக் கொள்ள முடியும் என கூறுகின்றனர்.

மேலும் செய்திகள்