அடிப்படை வசதிகள் கேட்டு கிராமமக்கள் மனு
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு கிராமமக்கள் மனு அளித்தனர்.
கரூர்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
இதில் கரூர் கம்பளியாம்பட்டி கிராமம் அருந்ததியர் தெரு பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- நாங்கள் சுமார் 15 வருடங்களாக எந்த ஒரு வசதிகளும் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். தண்ணீர் வசதி, மயானம், தெருவிளக்கு, சாலைவசதி மற்றும் பொதுக்கழிப்பிடம், சாக்கடை வசதி கோரியும், கொசூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் பலமுறை கோரிக்கை வைத்தும் நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை. எனவே அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
குடிநீர் வசதி
சணப்பிரட்டி அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் ,சணப்பிரட்டி அடுக்குமாடி குடியிருப்பில் 192 குடியிருப்புகள் உள்ளன. எங்களுக்கு 24 மணி நேர குடிநீர் வசதி, குப்பை வண்டி, மின்சார வசதி, சாலை வசதி, தெரு விளக்கு, சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கூறியிருந்தனர்.
வீடு கட்டி தர வேண்டி...
புலியூர் வெங்கடாபுரத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- நான் இந்த முகவரியில் வசித்து வருகிறேன். எனக்கு 2 குழந்தைகள் இருந்தனர். இதில் எனது 2-வது மகன் சுனில் கடந்த 24-ந்தேதி அதிகாலை 1.30 மணி அளவில் பலத்தமழை காரணமாக வீட்டு சுவர் இடிந்து நசுங்கி உயிர் இழந்தார்.
எனது முதல் மகன் ஆகாஷ் சுவர் இடிந்து விழுந்ததில் 2 கைகளும் உடைந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். வீடு இடிந்து விழுந்ததால் என் மனைவி, நான் இப்போது தங்க கூட இடம் இல்லாமல் தவித்து வருகிறோம். இது தொடர்பாக அரசு அதிகாரிகளிடமும் மனு செய்து உள்ளோம். தற்போது நான் மற்றும் மனைவியுடன் தங்க மாற்று ஏற்பாடாக வீடு கட்டி தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.