பா.ஜ.க.வினர் தர்ணா போராட்டம்
கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க.வினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.;
கரூர்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க கோரி தமிழக அரசை கண்டித்து நேற்று கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. கரூர் மாவட்ட பட்டியல் அணி மற்றும் வர்த்தக அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன் தலைமை தாங்கினார். பட்டியல் அணி மாவட்ட தலைவர் முருகேசன், வர்த்தக அணி மாவட்ட தலைவர் விபின் சூர்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில மகளிர் அணி துணை தலைவி மீனா வினோத்குமார், தொழிற் பிரிவு மாவட்ட தலைவர் ஆர்.வி.எஸ். செல்வராஜ் உள்பட பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.தொடர்ந்து இதுகுறித்து கலெக்டரிடம் மனு கொடுக்க பா.ஜ.க.வினர் சென்றனர். அப்போது போலீசார் மறித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க 5 பேருக்கு மட்டுமே அனுமதி என கூறினர்.
இதனால் பா.ஜ.க.வினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பா.ஜ.க.வினர் கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ் பா.ஜ.க.வினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதில் சமரசம் ஏற்பட்டது. இதனையடுத்து பா.ஜ.க.வினர் தர்ணா போராட்டத்தை கைவிட்டனர். இதனையடுத்து பா.ஜ.க.வினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து விட்டு சென்றனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.