சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் 22-ந்தேதி தொடங்குகிறது நாக்பூருக்கு பதில் மும்பையில் நடைபெறும்

மராட்டிய சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 22-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை நாக்பூருக்கு பதில் மும்பையில் நடைபெறுகிறது.

Update: 2021-11-29 17:22 GMT
கோப்பு படம்
மும்பை, 
மராட்டிய சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 22-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை நாக்பூருக்கு பதில் மும்பையில் நடைபெறுகிறது. 
அலுவல் ஆய்வு குழு கூட்டம்
மராட்டிய சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் ஆண்டுதோறும் மாநிலத்தின் 2-வது தலைநகரம் என அழைக்கப்படும் நாக்பூரில் நடைபெறுவது வழக்கம். 
இந்தநிலையில் இந்த ஆண்டு குளிர்கால கூட்டத்தொடரை நடத்துவது குறித்து சட்டசபை அலுவல் ஆய்வு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. 
இதில் சட்டசபை விவகாரத்துறை மந்திரி அனில் பரப்பும் கலந்துகொண்டார். கூட்டத்திற்கு பிறகு மந்திரி அனில் பரப் அளித்த செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 மும்பையில்...
மராட்டிய சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் நாக்பூருக்கு பதிலாக மும்பையில் வருகிற 22-ந்தேதி முதல் 28-ந் தேதி வரை நடைபெறும். 
முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் உடல்நிலையை கருத்தில் கொண்டு இந்த கூட்டத்தொடர் நாக்பூரில் இருந்து மும்பைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. 
முதல்-மந்திரி கூட்டத்தொடரில் தொடர்ந்து கலந்துகொள்ள விரும்பியதால் குளிர்கால கூட்டத்தொடருக்கான இடம் மாற்றப்பட்டு உள்ளது. கூட்டத்தொடரின் காலத்தை நீட்டிப்பது குறித்து டிசம்பர் 24-ந் தேதி முடிவு செய்யப்படும். 
இந்த கூட்டத்தொடரில் 11 மசோதாக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. 
இவ்வாறு அவர் கூறினார். 
இந்த மாதம் முதுகு வலி அதிகமானதால் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அவர் விமான பயணம் மேற்கொள்ள வேண்டாம் என டாக்டர்கள் அறிவுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்