சின்னசேலம் பகுதியில் தொடர் மழை பெய்தும் நிரம்பாத ஏரி வாய்க்காலை தூர்வார கலெக்டருக்கு விவசாயிகள் கோரிக்கை
சின்னசேலம் பகுதியில் தொடர் மழை பெய்தும் நீர்வரத்து இல்லாமல் போனதால் ஏரி நிரம்பாமல் உள்ளது. எனவே வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று கலெக்டருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சின்னசேலம்,
சின்னசேலம் அருகே நைனார்பாளையம் கிராமத்தில் நல்லாண்பிள்ளை பெற்றாள் ஏரி உள்ளது. 102 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியின் மூலம், அந்த பகுதியில் உள்ள சுமார் 500 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது.
பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த ஏரிக்கு பல ஆண்டுகளாக தண்ணீர் வரத்து சரியான அளவில் இல்லை. இதனால் ஏரியும் நிரம்பாமல் போய்விடுதால், அதை சார்ந்துள்ள விவசாயிகள் வேளாண் பணியை மேற்கொள்ளவும் முடியாமல் போனது.
இந்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, போதும், போதும் என்கிற அளவுக்கு பெய்து வருகிறது. இதனால் சின்னசேலம் பகுதியில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பி விட்டன. ஆனால், இந்த ஏரி மட்டும் இன்னும் நிரம்பவில்லை. இது விவசாயிகளை வேதனையடைய செய்துள்ளது.
வாய்க்கால் ஆக்கிரமிப்பு
இதுபற்றி விவசாயிகள் தரப்பில் கூறுகையில், நைனார்பாளையம் ஏரிக்கு தண்ணீர் வரும் வனப்பகுதியில் உள்ள வரத்து வாய்க்காலில் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.
மேலும் தோட்டப்பாடி எல்லை பகுதியில் சிலர் வாய்க்காலை ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வருகிறார்கள். இதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் யாரும் கண்டுக்கொள்வதில்லை.
இதனால் தான் ஏரிக்கு தண்ணீர் வரத்து இல்லாமல் உள்ளது. தற்போது சுற்றிலும் உள்ள பகுதியில் இருந்து வந்த தண்ணீர் தான், ஏரியில் குட்டை போன்று தேங்கி நிற்கிறது.
இதை வைத்து நாங்கள் எப்படி விவசாய பணிகளை மேற்கொள்ள முடியும் என்று கவலையுடன் அவர்கள் தெரிவித்தனர்.
நடவடிக்கை தேவை
எனவே மாவட்ட கலெக்டர் உடனடியாக தலையிட்டு, ஏரிக்கு தண்ணீர் வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை தற்போதைய பருவமழை காலத்திலேயே மேற்கொள்ள வேண்டும் என்பதே ஒட்டுமொத்த விவசாயிகளின் குரலாக இருக்கிறது.