முதியவர் உடலுடன் கிராம மக்கள் மறியல்

சுடுகாட்டை விரிவுப்படுத்தக்கோரி, முதியவர் உடலுடன் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.;

Update: 2021-11-29 16:36 GMT
கடமலைக்குண்டு:

கடமலைக்குண்டு அருகே குமணன்தொழு ஊராட்சியில் வனத்தாய்புரம் கிராமம் உள்ளது. இங்கு 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்களுக்கான சுடுகாடு மண்ணூத்து சாலையோரத்தில் அமைந்துள்ளது. இந்த சுடுகாட்டின் பரப்பளவு மிகவும் குறைவாக உள்ளது.

 இதனால் ஒரே இடத்தில் மீண்டும், மீண்டும் உடல்களை புதைக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே சுடுகாட்டை விரிவுப்படுத்தி, அதில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று வனத்தாய்புர கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

இந்தநிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த பாண்டி (வயது 65) என்பவர் உடல்நலக்குறைவால் நேற்று இறந்தார். அவரது உடலை அடக்க செய்ய உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கடுகாட்டுக்கு கொன்று சென்றனர். அப்போது கடுகாட்டுக்கு செல்லும் சாலையின் குறுக்கே உடலை வைத்து கிராம மக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த குமணன்தொழு ஊராட்சி நிர்வாகத்தினர் மற்றும் கடமலைக்குண்டு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனையடுத்து நேற்று இரவு, ஆண்டிபட்டி தாசில்தார் திருமுருகன் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். 

அப்போது, இன்னும் ஒருவார காலத்தில் அளவீடு செய்து நிலம் இருந்தால் சுடுகாடு விரிவாக்கம் செய்து தரப்படும் என்று உறுதி அளித்தார். இதனை ஏற்று கிராம மக்கள், மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்