கொசு உற்பத்தியாகும் சூழ்நிலையில் இருந்த 4 கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம்

கொசு உற்பத்தியாகும் சூழ்நிலையில் இருந்த 4 கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2021-11-29 16:20 GMT
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக பொதுமக்களுக்கு இருமல், சளி, காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஆஸ்பத்திரிகளில் சளி, இருமல் பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநகர் பகுதியில் உள்ள 60 வார்டுகளிலும் மாநகராட்சி பணியாளர்கள் வீடு வீடாக சென்று தூய்மை பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்போது அவர்கள், வீடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தண்ணீர் தேங்காத வகையில் பார்த்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறார்கள். மேலும் வீட்டில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி, குடங்கள் போன்றவற்றை மூடி வைத்திருக்க வேண்டும் என்றும், டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை கூறி வருகிறார்கள்.
கட்டிடங்களில் தண்ணீர் தேங்கினால் முதலில் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து 2-வது முறையும் அலட்சியமாக இருந்தால் சம்பந்தப்பட்ட கட்டிட உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அதன்படி ஈரோடு மாநகராட்சி பகுதியில் கொசு உற்பத்தியாகும் சூழ்நிலையில் இருந்த 4 கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

மேலும் செய்திகள்