வட்டமலை கரை ஓடை அணைக்கு தண்ணீர் திறப்பு

வட்டமலை கரை ஓடை அணைக்கு தண்ணீர் திறப்பு

Update: 2021-11-29 16:14 GMT
வெள்ளகோவில், 
பொங்கலூர் அருகே உள்ள கள்ளிபாளையம் பி.ஏ.பி. கால்வாயில் இருந்து 25 ஆண்டுகளுக்கு பிறகு வட்டமலை கரை ஓடை அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தண்ணீர் மீது பூக்கள் தூவி விவசாயிகள் வணங்கினர்.
வட்டமலை கரை ஓடை அணை
வெள்ளகோவில் அருகே உத்தமபாளையத்தில் வட்டமலை கரை ஓடை அணை உள்ளது. இந்த அணை பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன விஸ்தரிப்பு திட்டத்தின்கீழ் 1980-ம் ஆண்டு ரூ.2கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில், 600 ஏக்கர் பரப்பளவில் 27 அடி உயரத்தில், உத்தமபாளையம், இலக்கமநாயக்கன்பட்டி, முளையாம்பூண்டி, புதுப்பை, கஸ்தூரிபாளையம். சொரியங்கிணத்துப்பாளையம், மயில்ரங்கம், வேலப்பநாயக்கன்வலசு உள்பட 30 கிராமங்கள் பயன்பெறும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
 இந்த அணை கட்டியதற்குப்பிறகு கடந்த 1980, 1981, 1982 ஆகிய 3 ஆண்டுகள் மட்டுமே தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன்பின்னர்  1995-ம் ஆண்டு திறந்து விடப்பட்டது. அதற்குப்பிறகு இதுநாள் வரை சுமார் 25 ஆண்டுகளாக அணைக்கு நீர் திறக்கப்படவில்லை. இதனால் வட்டமலை கரை ஓடை அணை நலச்சங்கத்தின் சார்பில் மற்றும்விவசாயிகள் சார்பில் அரசிடம் பலமுறை கோரிக்கை முன்வைத்தனர். 
10,008 அகல் விளக்குகளால் தீபம்
இதுநாள் வரை தண்ணீர் விடாததால் கடந்த 2 ஆண்டுகளாக கார்த்திகை தீபத்தையொட்டி விவசாயிகள் பொதுமக்கள் தன்னார்வ அமைப்பினர் சேர்ந்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அணையின் மீது 10,008 அகல் விளக்குகளால் தீபம் ஏற்றினர்.  
 கார்த்திகை தீபத்தையொட்டி 3-ம் ஆண்டாக கடந்த மாதம் 21-ந் தேதி 10,008 அகல்விளக்குகளால் தீபம் ஏற்றினர். இந்த நிகழ்ச்சியில் பாகுபாடின்றி விவசாயிகள், பொதுமக்கள்,தன்னார்வ அமைப்பினர், அரசியல்வாதிகள், ஆண்கள், பெண்கள், சிறுவர் முதல் பெரியவர் வரை கலந்துகொண்டனர்.
பூக்கள் தூவி வரவேற்றனர்
 இதுகுறித்து தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் முயற்சியில் நேற்று முன்தினம் பொங்கலூர் அருகே உள்ள கள்ளிபாளையம் பி.ஏ.பி. கால்வாய் ஷட்டரிலிருந்து வட்டமலை கரை ஓடை அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அப்போது வெள்ளகோவில் பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நேரில் சென்று தண்ணீரில் பூக்கள் தூவி வரவேற்றனர்.

மேலும் செய்திகள்