உடன்குடி அருகே டாக்டரை காரில் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்

உடன்குடி அருகே டாக்டரை காரில் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்

Update: 2021-11-29 15:40 GMT
குலசேகரன்பட்டினம்:
உடன்குடி அருகே டாக்டரை காரில் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான 7 பேர் கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.
வாகன சோதனை
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக காரில் வந்த 9 பேர் கொண்ட கும்பலை வழிமறித்து போலீசார் விசாரித்தனர். அப்போது காரின் டிரைவர் மதுபோதையில் இருந்ததால், அவர்கள் அனைவரையும் போலீஸ் நிலையத்துக்கு வருமாறு அழைத்தனர்.
இதற்கிடையே, காரில் இருந்த 7 பேர் நைசாக தப்பியோடி விட்டனர். காரில் இருந்த டிரைவர் உள்ளிட்ட 2 பேரை கயத்தாறு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
பல் டாக்டர் கடத்தல்
விசாரணையில், காரை ஓட்டி வந்தவர் நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே தோட்டாக்குடி தெற்கு தெருவைச் சேர்ந்த வெள்ளப்பாண்டி மகன் பரமகுரு (வயது 24) என்பதும், காரில் இருந்த மற்றொருவர் உடன்குடி தேரியூரைச் சேர்ந்த பல் டாக்டரான முத்துலிங்கம் மகன் முத்துகுமரன் (29) என்பதும் தெரிய வந்தது.
மேலும் பரமகுரு உள்ளிட்ட 8 பேர் கொண்ட கும்பல் பணத்துக்காக முத்துகுமரனை காரில் கடத்தி வந்த அதிர்ச்சி தகவலும் தெரியவந்தது. இதையடுத்து பரமகுருவை போலீசார் கைது செய்தனர்.
போலீசாரின் விசாரணையில் கீழ்கண்ட தகவல்கள் தெரியவந்தது. அதன் விவரம் வருமாறு:-
பணம் கொடுக்கல் வாங்கல்
முத்துகுமரன் முன்பு என்ஜினீயரிங் படித்து விட்டு சென்னையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனத்தில் வேலை செய்தார். அப்போது பலரிடம் மொத்தம் ரூ.15 லட்சம் வரையிலும் பணம் வாங்கி, அந்த ஸ்கூட்டர் நிறுவனத்தில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த நிறுவனத்தை மூடி விட்டதாக தெரிகிறது.
தொடர்ந்து முத்துகுமரன் பல் டாக்டருக்கு படித்து விட்டு உடன்குடியில் கிளினிக் நடத்தி வருகிறார். இந்த நிலையில் ஏற்கனவே அவரிடம் பணம் கொடுத்தவர்கள் தங்களது பணத்தை திருப்பி தருமாறு முத்துகுமரனுக்கு நெருக்கடி கொடுத்தனர்.
இந்த நிலையில் உடன்குடி மெய்யூரில் காரில் சென்ற முத்துகுமரனை பரமகுரு உள்ளிட்ட 8 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து, மிரட்டி அதே காரில் கடத்தி சென்றனர். அப்போது கயத்தாறில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் பரமகுரு சிக்கியதும், மற்ற 7 பேரும் நைசாக தப்பி சென்றதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
7 பேருக்கு வலைவீச்சு
இதையடுத்து தலைமைறைவான சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த ரவி, தளக்காவயலைச் சேர்ந்த சேரன், உத்தமன், நெல்லை மாவட்டம் சிங்கிகுளத்தைச் சேர்ந்த சுந்தர், முத்துவேல், நாங்குநேரி வானமாமலை கோவில் தெருவைச் சேர்ந்த பாண்டி, நாங்குநேரி மஞ்சள்குளத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் ஆகிய 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்