வரதராஜபுரம் பகுதியில் தொடரும் மழை வெள்ள தேக்கம்

வரதராஜபுரம் பகுதியில் மழை வெள்ள தேக்கம் என்பது எத்தனையோ அதிகாரிகள் வந்தும் பயனில்லாமல் தொடந்து நடைபெறுகிறது.

Update: 2021-11-29 13:47 GMT
வெள்ளம் வடியாமல் உள்ளது

வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் படப்பை அடுத்த வரதராஜபுரம் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கி வெள்ளக்காடானது. மழை வெள்ளத்தை அகற்றி வந்த நிலையில் தற்போது 3 நாட்களுக்கு மேலாக மழை பெய்து வருவதால் மீண்டும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பி.டி.சி.நகர், கெஜலட்சுமி நகர், புவனேஸ்வரி நகர், ராயப்பா நகர், உள்ளிட்ட பல்வேறு நகர் பகுதிகளில் வெள்ளம் வடியாமல் உள்ளது. பொதுமக்களை போலீசார் படகு மூலம் மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கின்றனர்.

அதிகாரி ஆய்வு

இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில்:-

மழை காலங்களில் மத்தியக்குழு, மாவட்ட கலெக்டர் மற்றும் வெள்ள தடுப்பு அதிகாரிகள் வந்து ஆய்வு செய்வதும் ஆய்வு செய்யும்போது அவர்களுடன் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, போலீஸ்துறை தீயணைப்பு துறை, மீட்பு படையினர், மின்சாரத்துறை மற்றும் மருத்துவ துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் வந்து நிற்கின்றனர். ஒவ்வொரு துறையை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் ஊழியர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் வருகின்றனர். இதனால் மற்ற பணிகளில் கவனம் செலுத்த முடியாமல் உள்ளது. இந்த மழை வெள்ளம் தேங்கியுள்ள பகுதிகளில் அதிகாரிகள் வந்து செல்கின்றனர்.

ஆனால் ஆண்டு தோறும் இதே பிரச்சினைதான் வரதராஜபுரத்தில் தொடர்ந்து நடக்கிறது. எத்தனை அதிகாரிகள் வந்து பார்த்தாலும் தொடர்ந்து மழை காலங்களில் வெள்ளம் வடியாமல் குடியிருப்புகளில் உள்ள நாங்கள்தான் அவதிக்குள்ளாகிறோம் என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்