தபால் ஊழியர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி
தபால் ஊழியர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி;
கோவை
கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் அற்புதராஜன் (வயது 45). தொண்டாமுத்தூர் அஞ்சல் நிலையத்தில் தபால் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று தனது ஒரு ஆண் மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். போலீசார் வழக்கம்போல் அவரது உடமைகளை சோதனை செய்ய முயன்றனர்.
அப்போது திடீரென தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனால் அங்குபரபரப்பு ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக விரைந்து சென்று, அவரை தடுத்து நிறுத்தி பெட்ரோல் கேனை பறித்து தண்ணீரை அவர் மீது ஊற்றி ஆசுவாசப் படுத்தினர்.
இதுகுறித்து அற்புதராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தொண்டாமுத்தூர் எம்.ஜி.ஆர். நகரில் நான் இருபது ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறேன். எனது வீட்டின் அருகில் வசிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஒருவர் இடப்பிரச்சினை காரணமாக அடிக்கடி என்னிடம் தகராறில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த 2010-ம் ஆண்டு எனது மனைவியை தாக்கிய வழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் மேல்முறையீடு செய்து நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த அவர், மீண்டும் என்னிடமும் எனது மனைவி மற்றும் பெண் குழந்தைகளிடம் தகாத வார்த்தைகள் பேசி தாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
இது தொடர்பாக தொண்டாமுத்தூர் போலீசாரிடம் பலமுறை புகார் அளித்தும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் கடந்த 15-ந் தேதி கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தேன். ஆனால் அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் மன விரக்தி அடைந்த நான் தீக்குளிக்க முயன்றேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதன் பின்னர் அவரை விசாரணைக்காக போலீசார் அங்கிருந்து ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.