பிறந்து 5 நாளே ஆன குழந்தையை ரூ.2½ லட்சத்துக்கு விற்ற தாய்

சென்னையில் பிறந்து 5 நாளே ஆன பச்சிளம் ஆண் குழந்தை ரூ.2½ லட்சத்துக்கு விற்கப்பட்டது. அந்த பணத்தை குழந்தையின் தாயிடம் இருந்து பறித்து சென்ற ரவுடிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2021-11-29 11:14 GMT
குழந்தையை விற்க ஆலோசனை

சென்னை புழல் காவாங்கரை, கே.எஸ்.நகரைச் சேர்ந்தவர் யாஸ்மின். இவருக்கு திருமணமாகி ஷர்மிளா என்ற 10 வயது பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் யாஸ்மின் 2-வதாக கர்ப்பம் அடைந்தார். இந்த சூழ்நிலையில் யாஸ்மினின் கணவர் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டதாக தெரிகிறது.

கையில் ஒரு பெண் குழந்தை, வயிற்றில் வளரும் ஒரு குழந்தை, கணவர் இல்லாத நிலையில் எப்படி வாழ்வது? என்று யாஸ்மின் தவித்தார். இந்த இக்கட்டான நிலையில் ஆஸ்துமா வியாதி வேறு அவரை பிடித்துக் கொண்டு துன்புறுத்தியது.

ஆஸ்துமா நோய்க்காக யாஸ்மின், புரவைசாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அங்கு எண்ணூரைச் சேர்ந்த ஜெயகீதா என்ற பெண் அவருக்கு அறிமுகமானார். வயிற்றில் வளரும் குழந்தையை அழித்தால்தான் நிம்மதியாக வாழ முடியும் என்று யாஸ்மின் முடிவு எடுத்தார். அதுபற்றி ஜெயகீதாவிடம் ஆலோசனை கேட்டார்.

குழந்தையை அழிக்காமல் நல்லபடியாக பெற்றெடுத்தால், அதை நல்ல விலைக்கு விற்று விடலாம் என்றும், அந்த பணத்தில் நிம்மதியாக வாழலாம் என்றும், அவருக்கு ஜெயகீதா ஆலோசனை கூறினார். அதன்படி ஜெயகீதா அரவணைப்பில் குழந்தையை வயிற்றில் நல்லபடியாக வளர்த்தாள் யாஸ்மின்.

ரூ.2½ லட்சத்துக்கு...

கடந்த 21-ந்தேதி ராயபுரத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதன்பிறகு 25-ந் தேதி அன்று, பிறந்து 5 நாளே ஆன தனது குழந்தையை விற்பதற்காக மனதை கல்லாக்கிக் கொண்ட யாஸ்மின், புரசைவாக்கம் டவுட்டன் மேம்பாலத்தின் கீழ் குழந்தையுடன் நின்று கொண்டிருந்தார்.

அப்போது ஜெயகீதா, ஒரு ஆண், ஒரு பெண் ஆகியோருடன் அங்கு வந்தார். குழந்தையின் விலை ரூ.2½ லட்சம் என்று சொன்ன ஜெயகீதா, பணத்தை ஒரு பையில் போட்டு யாஸ்மினிடம் கொடுத்தார். அதைபெற்றுக்கொண்ட யாஸ்மின், குழந்தையை அவர்களிடம் கொடுத்து விட்டு, அங்கிருந்து ஒரு ஆட்டோவில் ஏறி சென்றார். பெற்றெடுத்த 5 நாளில் குழந்தை விற்கப்பட்டது.

பணம் கொள்ளை

புளியந்தோப்பு ஆட்டுதொட்டி அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் யாஸ்மின் சென்ற ஆட்டோவை மறித்தார்கள். ஆட்டோ டிரைவரிடம் முகவரி கேட்பது போல நடித்த அவர்கள், கண் இமைக்கும் நேரத்தில் யாஸ்மின் கையில் வைத்திருந்த பணப்பையை பறித்துச்சென்றுவிட்டனர். அவர்கள் ரவுடிகளை போல காணப்பட்டார்கள்.

ஒரு பக்கம் குழந்தையை விற்று பறிகொடுத்த யாஸ்மின், இன்னொரு பக்கம் அதன்மூலம் கிடைத்த பணத்தையும் பறிகொடுத்து தவித்து நின்றார். பின்னர் இதுபற்றி வேப்பேரி போலீசில் யாஸ்மின் புகார் செய்தார். வேப்பேரி உதவி கமிஷனர் நடேசன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் கண்ணன் இது குறித்து வழக்குப்பதிவு செய்தனர்.

ஆந்திர தம்பதிக்கு விற்பனை

பின்னர் போலீசார் அதிரடி விசாரணை நடத்தி ஜெயகீதாவை பிடித்தனர். அவர் மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்தான் குழந்தையை வாங்கிச் சென்றதாக சொன்னார். மதுரை பெண்ணையும் பிடித்தனர். மதுரை பெண் சொன்ன தகவல் போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்தது.

ஆந்திராவைச் சேர்ந்த குழந்தை இல்லாத தம்பதி ரூ.2½ லட்சம் கொடுத்து குழந்தையை வாங்கிச் சென்றதாக தெரிய வந்தது. பணத்தை பறித்துச் சென்றது, குழந்தையை விற்பதற்கு விலை பேசிய கும்பலுடன் தொடர்புடையவர்களா? அல்லது ரவுடிகளா? என்பதற்கு போலீசாரால் பதில் கண்டறிய முடியவில்லை.

முதலில் குழந்தையை மீட்டு விட்டு, அதன்பிறகு பணத்தை பறித்துச்சென்ற 2 பேரை பிடிக்க முடிவு செய்து போலீசார் களத்தில் இறங்கி உள்ளனர். லதா என்ற பெண்ணை தேடி வருகிறார்கள். அவர் மூலம் குழந்தை இருக்கும் இடத்தை கண்டுபிடித்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்