மழை வெள்ள பாதிப்புகளை சிறப்பு அதிகாரி அபூர்வா ஆய்வு
நெல்லையில் மழை வெள்ள பாதிப்புகளை சிறப்பு கண்காணிப்பு அதிகாரி அபூர்வா ஆய்வு செய்தார்.;
நெல்லை:
நெல்லையில் மழை வெள்ள பாதிப்புகளை சிறப்பு கண்காணிப்பு அதிகாரி அபூர்வா ஆய்வு செய்தார்.
சிறப்பு அதிகாரி ஆய்வு
நெல்லை மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை நெல்லை மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள பேரிடர் கால சிறப்பு கண்காணிப்பு அதிகாரி அபூர்வா நேற்று ஆய்வு செய்தார்.
டவுன் பகுதியில் இருக்கும் நெல்லை கால்வாய், காட்சி மண்டபம், அபிராமி நகர், கிருஷ்ண பேரி குளம், கண்டியபேரி குளம் உள்ளிட்ட இடங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டார்.
இதை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அதிக மழை
நெல்லை மாவட்டத்தில் எதிர்பாராத அளவில் வழக்கத்தை விட கூடுதலாக மழை பெய்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் நடப்பு மாதம் 380 மி.மீ மழை பெய்துள்ளது. சராசரியாக பெய்கிற மழையைவிட 110 மில்லி மீட்டர் மழை அதிகமாக பெய்துள்ளது. ஏற்கனவே பருவமழை காலத்தில் பெய்த கன மழையால் அணைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி இருக்கும் நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் உபரி நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்பட்டது. டவுன் காட்சி மண்டபம், நெல்லை கால்வாய், கிருஷ்ணபேரி குளம், கண்டியபேரி குளம், கோடகன் கால்வாய், இலந்தைகுளம் ஆகிய பகுதிகளில் 1,105 குளங்கள் உள்ளது. இதில் 503 குளங்கள் 100 சதவீதமும், 336 குளங்கள் 76 முதல் 99 சதவீதமும் நிரம்பி உள்ளது. 80 குளங்கள் 51 முதல் 75 சதவீதமும், 153 குளங்கள் 26 முதல் 50 சதவீதமும், 33 குளங்கள் 1 முதல் 25 சதவீதமும் நீர் நிரம்பி உள்ளது.
நிரந்தர தீர்வு
கால்வாய்களில் ஏற்பட்ட அடைப்புகளால் நகர் பகுதிகளில் மழைநீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டது. வரும் காலத்தில் பாதிப்பு ஏற்படாத வகையில் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள சாலைகள் சேதம் அடைந்து உள்ளதை தற்காலிகமாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மழை முடிந்ததும் முழுமையாக சீரமைக்கப்படும்.
நீர் நிலைகள், கால்வாய்களில் உள்ள அடைப்புகள் விரைந்து சரிசெய்யப்படும். தற்காலிகமாக தண்ணீரை வடியவைப்பதற்கான பணிகள் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டு வருகிறது.
வருங்காலங்களில் முறையான திட்டம் தீட்டி நீர் நிலைகளில், வடிகால் வரைப்படங்களை கொண்டு, ஆக்கிரமிப்பு பகுதிகளையும் கண்டறிந்து அகற்றி, மறு சீரமைப்பு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மழை பாதிப்பு குறித்து தண்ணீர் வடிந்த பிறகு கணக்கெடுப்பு பணி நடத்தப்படும். தற்போது பெய்த தொடர் மழையினால் இதுவரை 2 பேர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கலெக்டர்
இந்த ஆய்வின் போது நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணன், நெல்லை உதவி கலெக்டர் சந்திரசேகர், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் சத்தியமூர்த்தி, நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் ஞானசேகர், உதவி செயற்பொறியாளர் தங்கராஜன், நெல்லை தாசில்தார் சண்முக சுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் சென்றனர்.
மரக்கிளைகள் அகற்றம்
தொடர்ந்து நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட டவுன் காட்சி மண்டபம் அருகில் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள பகுதிகளில் கலெக்டரின் உத்தரவுப்படி ஆக்கிரமிப்பு மற்றும் மரக்கிளைகள் அகற்றும் பணி நேற்று நடைபெற்றது. இதையொட்டி டவுன் காட்சி மண்டபம் மற்றும் சுற்றுப்பகுதியில் பாதுகாப்பு கருதி மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்பட்டது.