மனிதர்களை விண்ணுக்கும் அனுப்பும் ககன்யான் திட்டத்தை குஜராத்திற்கு மாற்ற முயற்சி? - எதிர்ப்பு தெரிவித்து மோடிக்கு டி.கே.சிவக்குமார் கடிதம்

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை குஜராத்திற்கு மாற்ற முயற்சி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2021-11-28 20:48 GMT
பெங்களூரு:

ககன்யான் திட்டம்

  பிரதமர் மோடிக்கு கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

  பெங்களூருவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்(இஸ்ரோ) தலைமை அலுவலகம் உள்ளது. இது கன்னடர்களுக்கு பெருமை தரும் விஷயம். விண்வெளி ஆராய்ச்சியில் அந்த நிறுவனம், புதிய திட்டங்களை செயல்படுத்தி சாதனைகளை புரிந்து வருகிறது. மனிதர்களை விண்ணுக்கு அனுப்பு திட்டத்திற்கான தொழில்நுட்பங்களை கண்டறியும் பணியை இஸ்ரோ கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கியது. இது தற்போது ககன்யான் திட்டம் என்ற பெயரில் வருகிற 2023-ம் ஆண்டு சொந்த ராக்கெட் மூலம் மனிதர்களை விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.

முயற்சியை கைவிட வேண்டும்

  இந்த திட்டம் வெற்றிகரமாக அமைந்தால் உலகில் அமெரிக்கா, ரஷியா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 4-வது இடத்தை பிடிக்கும். பொதுவாக கன்னடர்கள் உணர்வு பூர்வமானவர்கள். இந்த திட்டம் கர்நாடகத்துக்கு தொடர்பு உடையதாக இருப்பதால் அவர்கள் பெருமை அடைகிறார்கள். அந்த திட்டத்துடன் கன்னடர்களுக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது.

  இந்த நிலையில் ககன்யான் திட்டம் பெங்களூருவில் இருந்து குஜராத்திற்கு மாற்ற முயற்சிகள் நடப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை இந்த திட்டம் மாற்றப்பட்டால் மத்திய அரசு, கன்னடர்கள் தங்களை புறக்கணிப்பதாகவும், தங்களின் உணர்வுகளை அவமதிப்பதாகவும் நினைப்பார்கள். மத்திய அரசின் இந்த முயற்சி கூட்டாட்சி தத்துவத்தின் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால் ககன்யான் திட்டத்தை குஜராத்திற்கு மாற்றும் முயற்சியை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
  இவ்வாறு டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்