விவசாயி சரமாரி வெட்டிக் கொலை

வீரவநல்லூர் அருகே விவசாயி சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

Update: 2021-11-28 20:45 GMT
வீரவநல்லூர்:
வீரவநல்லூர் அருகே விவசாயி சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விவசாயி

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே வெள்ளாங்குளி கிராமம் சித்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 50). விவசாயியான இவர் தனது வீட்டில் மாடுகளும் வளர்த்து வந்தார். இவருக்கும், மற்றொரு தரப்புக்கும் இடையே மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஆறுமுகம் நேற்று மாடு மேய்ச்சலுக்கு அழைத்து சென்று விட்டு இரவில் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.

வெட்டிக் கொலை

ஊருக்குள் வந்து கொண்டிருந்தபோது மர்மநபர்கள் 4 பேர் திடீரென ஆறுமுகத்தை வழிமறித்தனர். அவர்கள் தாங்கள் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் கண்ணிமைக்கும் நேரத்தில் ஆறுமுகத்தை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். 
பின்னர் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் வீரவநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். 
பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துமர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்