பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கு நீர் வரத்து குறைந்தது.
பவானிசாகர்
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கு நீர் வரத்து குறைந்தது.
பவானிசாகர் அணை
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது.
நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாறும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக உள்ளன. பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் பவானிசாகர் அணை விளங்குகிறது.
நீர்வரத்து குறைந்தது
அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் மழை பொழிவு குறைந்தது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து குறைந்தது.
நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 832 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு உபரி நீராக 6 ஆயிரத்து 300 கனஅடியும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 1,500 கன அடியும் என மொத்தம் அணையில் இருந்து வினாடிக்கு 7 ஆயிரத்து 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 104.00 அடியாக இருந்தது.
நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 26 கனஅடியாக குறைந்தது. அதே வேளையில் அணையின் நீர்மட்டம் 104 அடியாக நீடித்தது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 1,500 கன அடியும், பவானி ஆற்றில் வினாடிக்கு 500 கன அடி உபரி நீரும் திறக்கப்பட்டது.