வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த 2 பேர் கைது

பவானிசாகர் அருகே வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-11-28 20:36 GMT
பவானிசாகர்
பவானிசாகர் அருகே வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். 
ரகசிய தகவல்
பவானிசாகர் அருகே உள்ள தொப்பம்பாளையம் பகுதியில் நாட்டு வெடிகுண்டு வைத்திருப்பதாக பவானிசாகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 
தகவல் கிடைத்ததும் பவானிசாகர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சத்யா சிங் தலைமையில் போலீசார் தொப்பம்பாளையம் பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 
கைது
அப்போது தொப்பம்பாளையம் மேடு யமுனா வீதியை சேர்ந்த கந்தசாமி என்பவரது மகன் சூரியபிரகாஷ் (வயது 22) என்பவரது வீட்டில் போலீசார் சோதனையிட்டனர். சோதனையின் போது அவருடைய வீட்டில் இருந்த மஞ்சள் பை ஒன்றில் 16 நாட்டு வெடிகுண்டு இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
 பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், ‘வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக அவர் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்தது,’ தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சூரியபிரகாஷ் மற்றும் அவருக்கு உதவியாக செயல்பட்ட தாளவாடி அருகே உள்ள சூசைபுரத்தை சேர்ந்த பூபதி (25) ஆகியோரை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்