ஆட்டோ டிரைவர் குத்திக் கொலை
துறையூர் அருகே ஆட்டோ டிரைவர் சரமாரியாக குத்திக் கொலை செய்யப்பட்டார்
உப்பிலியபுரம்
திருச்சி மாவட்டம், ஆலத்துடையான்பட்டியைச் சேர்ந்தவர் பிரபு (வயது 38). துறையூரில் சரக்கு ஆட்டோ ஓட்டி வந்தார். பிரபுவுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி ரேணுகாவிற்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அவர் கடந்த 4 ஆண்டுக்கு முன் உடல் நலக்குறைவால் இறந்தார். அதன்பின்னர் உஷா (30) என்ற பெண்ணை பிரபு 2-வது திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல சவாரியை முடித்து விட்டு வீட்டுக்கு புறப்பட்டார்.
அப்போது அவரது செல்போன் எண்ணுக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அந்த நேரத்தில் சாப்பிட அழைத்த மனைவி உஷாவிடம், வந்து சாப்பிடுகிறேன் என சொல்லி விட்டுச் சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. உஷா, அவரது எண்ணை மீண்டும் தொடர்பு கொள்ள முயன்றபோது `ஸ்விட்ச்-ஆப்' செய்யப்பட்டிருந்தது.
இந்தநிலையில் நேற்று அதிகாலை பால் கறக்கச் சென்றவர்கள், ஆலத்துடையான்பட்டியிலிருந்து எம்.ஜி.ஆர். காலனி செல்லும் சாலையில் பிரபு கொலை செய்யப்பட்டு கிடப்பதாக கிடைத்த தகவலின்பேரில், உறவினர்களுடன் உஷா அங்கு விரைந்து சென்றார். அப்போது பிரபு கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
இதுகுறித்த தகவலின்பேரில், திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு அருள்மணி, துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர் சாந்தகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
திருச்சியிலிருந்து மோப்ப நாய் ஸ்பார்க் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்க வைக்கப்பட்டது. அந்த நாய் சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்து, சற்று தொலைவிலுள்ள கரிகாலி செல்லும் சாலை வரை சென்று திரும்பியது. ஆனால், யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்தில் மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
பின்னர், பிரபுவின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இதுகுறித்து உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபுவை கொலை செய்தவர்கள் யார்?, எதற்காக கொலை செய்யப்பட்டார்?, அவருடன் கடைசியாக செல்போனில் பேசியது யார்? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருவதுடன் இதில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.