தினத்தந்தி புகார் பெட்டி
தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
குண்டும்,குழியுமான சாலை
தஞ்சையை அடுத்த திருக்கானூர்பட்டி தேவாரம் நகரில் உள்ள தார் சாலைகள் பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக காட்சி அளிக்கின்றன. இதனால் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள், வேலைக்கு செல்பவர்கள் சாலையில் தேங்கி கிடக்கும் மழைநீரில் நடந்து சென்று வருகின்றனர். அதுமட்டுமின்றி சாலையில் தேங்கி கிடக்கும் மழைநீரினால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
-வெங்கடேசன், தேவாரம் நகர்.
சுகாதார சீர்கேடு
தஞ்சை மருத்துவக்கல்லூரி அருகே தோப்புக்குளம் பகுதியில் உள்ள சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், தேங்கி கிடக்கும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி சாலையின்நடுவே கழிவு நீர் தேங்கி கிடப்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அந்த வழித்தடத்தை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் தேங்கி கிடக்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?
-மார்க்கண்டேயன், தஞ்சாவூர்.
சேதமடைந்த மின்கம்பம்
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த வேதவிநாயகர் பகுதி காசிராமன் தெருவில் சேதமடைந்த மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பத்தில் அடிப்பகுதியில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து உள்ளது. மேலும், மின்கம்பத்தில் உள்ள இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதன்காரணமாக மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. இதனால் மின்கம்பம் உள்ள பகுதியை பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றிவிட்டு புதிய மின்கம்பம் நட நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், கும்பகோணம்.
தொற்றுநோய் பரவும் அபாயம்
தஞ்சை பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சாக்கடை குழியின் மூடி திறந்த நிலையில் உள்ளது. இதனால் சாக்கடை குழிக்குள் கழிவுநீருடன், மழைநீரும் கலந்து தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், தேங்கி கிடக்கும் நீரில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் திறந்த நிலையில் கிடக்கும் சாக்கடை குழி மூடியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
-பொதுமக்கள், தஞ்சை.
மாடுகளால் போக்குவரத்துக்கு இடையூறு
தஞ்சை சிங்கபெருமாள் குளம் முதல் ரெட்டிப்பாளையம் வரை உள்ள போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. குறிப்பாக இந்த மாடுகள் கூட்டமாக சாலையை மறித்தபடி நின்று கொள்கின்றன. இதனால் இருசக்கர, கார் மற்றும் கனரக வாகனங்களில் வருபவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை மாடுகள் அவ்வபோது முட்டிவிடுகின்றன. இதனால் சாலையில் பொதுமக்கள் அச்சத்துடன் நடந்து சென்று வருகின்றனர். மேலும், இரவு நேரங்களில் மாடுகள் சாலையின் நடுவே படுத்து கொள்கின்றன. இதனால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?
-ராஜராஜன், தஞ்சை.