கலவை தாலுகா அலுவலகத்திற்கு நள்ளிரவில் வந்த கலெக்டர்
தாலுகா அலுவலகத்திற்கு நள்ளிரவில் வந்த கலெக்டர்
கலவை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழையால் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஏரி, குளங்கள் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. மழை சேதங்களை தடுக்க அமைச்சர் மற்றும் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
கலவை பகுதியில் அதிக அளவு மழை பெய்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலவை தாலுகா அலுவலகத்திற்கு வந்தார்.
அப்போது அங்கிருந்த தாசில்தார் ஷமீமிடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழை பாதிப்பு குறித்து எவ்வாறு ஆய்வு மேற்கொண்டனர் என்பது குறித்து கேட்டறிந்தார்.
மேலும் மழையால் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், தாழ்வான பகுதியில் உள்ள மக்களை அருகே உள்ள கட்டிடத்தில் தங்கவைத்து அவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்ய வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார்.
வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி, வருவாய் ஆய்வாளர் வீரராகவன், கிராம நிர்வாக அதிகாரி சுகுமார் மற்றும் கிராம உதவியாளர்கள் உடனிருந்தனர்.