மழையால் 358 குடிசை வீடுகள் சேதம்

சிவகங்கை மாவட்டத்தில் பெய்த மழையால் 358 குடிசை வீடுகள் சேதம் அடைந்துள்ளன என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி கூறினார்.;

Update: 2021-11-28 17:48 GMT
சிவகங்கை, 
சிவகங்கை மாவட்டத்தில் பெய்த மழையால் 358 குடிசை வீடுகள் சேதம் அடைந்துள்ளன என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி கூறினார்.
மழை
தெற்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி யால் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் மாவட்டத்தின் பல இடங்களில் ,குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது. மேலும் சிவகங்கை நகரின் மையப் பகுதியில் உள்ள பழமையான தெப்பக்குளத்தின் சுற்றுச்சுவர் மழை காரணமாக 2 இடங்களில் இடிந்து விழுந்தது. மேலும் ஒரு இடத்தில் இடியும் நிலையில் உள்ளத.
 சிவகங்கை புதுவாழ்வு நகர்ப்பகுதிகளில் மழைநீர் தெருக்களை சூழ்ந்து நிற்பதால் கடந்த 2 நாட்களாக அந்த பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். தொடர்ந்து இந்த பகுதிகளை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் 358 குடிசை வீடுகள் சேதமடைந்து உள்ளன. இதில் 296 வீடுகள் பகுதி அளவிலும் 62 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. மேலும் கான்கிரீட் வீடுகள் 2 பகுதிஅளவில் சேதமடைந்து உள்ளன. மழையால் சேதமடைந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கு அரசின் நிவாரண நிதி வழங்கப்பட்டு உள்ளது. 
சேதம்
மேலும் மாவட்டத்தில் பெய்த மழையால் நெல், பருத்தி, எண்ணெய் வித்து, சிறுதானியம் போன்றவை சாகுபடி செய்யப்பட்ட 255 எக்டேர் நிலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதில் தற்போது 22 எக்ேடர் பரப்பில் தண்ணீர் தேங்கியதால் சேதமடைந்துள்ளது. மற்ற இடங்களில் தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதவிர 24 எக்டேர் பரப்பளவில் தோட்டக்கலை துறை பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளது.
 இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்