நாமக்கல் மாவட்டம் முழுவதும் தொடர் மழைக்கு 30 ஏரிகள் நிரம்பின பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்

நாமக்கல் மாவட்டம் முழுவதும் தொடர் மழைக்கு 30 ஏரிகள் நிரம்பின பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்;

Update: 2021-11-28 17:17 GMT
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் தொடர் மழைக்கு மேலும் 2 ஏரிகள் நிரம்பி இருப்பதால், இதுவரை நிரம்பி உள்ள ஏரிகளின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்து இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் 2 ஏரிகள் நிரம்பின
நாமக்கல் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 716.54 மி.மீட்டர் ஆகும். தற்போது வரை 713.17 மி.மீட்டர் மழை பெறப்பட்டு உள்ளது. நவம்பர் மாதம் முடிய பெய்ய வேண்டிய இயல்பு மழை அளவு 680.78 மி.மீட்டர் ஆகும். நவம்பர் மாதம் முடிய பெய்ய வேண்டிய இயல்பு மழையளவை விட கூடுதலாக 257.11 மி.மீடடர் மழை பெறப்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் மற்றும் குட்டைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
இந்த மாவட்டத்தில் 100 ஏக்கர் பரப்பளவுக்கு மேல் 79 ஏரிகள் உள்ளன. இவை பொதுப்பணித்துறை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவற்றில் கடந்த 18-ந் தேதி வரை மின்னக்கல், சேமூர், அக்கரைப்பட்டி, கஸ்தூரிப்பட்டி, பழையபாளையம், சிவநாயக்கன்பட்டி, செல்லிபாளையம், பாப்பான்குளம், வேட்டாம்பாடி என 28 ஏரிகள் நிரம்பி இருந்தன. தற்போது மாவட்டத்திலேயே பெரிய ஏரியான தூசூர், திப்ரமகாதேவி என மேலும் 2 ஏரிகள் நிரம்பி உள்ளன. இதனால் இதுவரை நிரம்பி உள்ள ஏரிகளின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.
38 ஏரிகளில் தண்ணீர் இல்லை
அகரம், புதுக்குளம் ஏரிகள் 75 சதவீதமும், பொன்னார்குளம் ஏரி 50 சதவீதமும், 7 ஏரிகள் 25 சதவீதத்திற்கு கீழும் தண்ணீர் நிரம்பி உள்ளன. இதுதவிர கீரம்பூர், கோனூர், கீழ்சாத்தம்பூர், பாச்சல், எடையப்பட்டி, அரூர் உள்ளிட்ட 38 ஏரிகள் தண்ணீரின்றி காணப்படுகின்றன. அவற்றில் சிறு, சிறு கிடங்குகளில் மட்டுமே மழைநீர் தேங்கி நிற்கிறது. அவற்றின் நீர்வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளே தண்ணீர் நிரம்பாமல் இருப்பதற்கு காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு 30 ஏரிகள் நிரப்பி இருப்பதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தூசூர் ஏரி
எருமப்பட்டி அருகே உள்ள தூசூர் ஏரியானது 517 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி ஆகும். நாமக்கல் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 13 ஆண்டுகளுக்கு பிறகு தூசூர் ஏரி நிரம்பி உள்ளது. இதனால் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் பிரச்சினை ஏற்படாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
 மேலும் ஏரி நிரம்பியதால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஏரி பகுதிக்கு சென்று மலர்தூவி தண்ணீர் வருவதை வரவேற்றனர்.

மேலும் செய்திகள்