நாமக்கல் அருகே ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல் 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது

நாமக்கல் அருகே ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல் 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது

Update: 2021-11-28 17:16 GMT
நாமக்கல்:
நாமக்கல் அருகே ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாகன சோதனை
நாமக்கல் மாவட்டம் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் நாமக்கல் அருகே உள்ள எர்ணாபுரம் பகுதியில் நேற்று அதிகாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது திருச்செங்கோட்டில் இருந்து நாமக்கல் நோக்கி வந்த சரக்கு வாகனம் ஒன்றை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 280 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து வாகனத்தில் இருந்த நபர்களிடம் விசாரணை செய்ததில், அவர்கள் குமாரமங்கலம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 41), கந்தம்பாளையத்தை சேர்ந்த விஜயவீரன் (30), மணியனூரை சேர்ந்த ராணி (32) என்பதும் அவர்கள் கஞ்சா பாக்கெட்டுகளை விற்பனைக்கு கடத்திக்கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து 280 கிலோ கஞ்சாவை சரக்கு வாகனத்துடன் பறிமுதல் செய்த தனிப்படை போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.
340 கிலோ கஞ்சா பறிமுதல்
மேலும் அவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையில் வரும் வழியில் 2 பேரிடம் கஞ்சா விற்பனைக்கு கொடுத்தது தெரியவந்தது. அதன்பேரில் ஈரோட்டை சேர்ந்த ஆனந்தி (39), ராஜி (61) ஆகியோரை கைது செய்த தனிப்படை போலீசார், அவர்களிடம் இருந்து 60 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 340 கிலோ கஞ்சாவின் மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் நேற்று பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பாக்கெட்டுகளை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து தமிழகம் மற்றும் கேரளாவுக்கு கஞ்சா கடத்தப்படுவதாக கடந்த 5 மாதங்களுக்கு முன்பு எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எனவே கஞ்சா கடத்தல் கும்பலை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கந்தம்பாளையம் பகுதியை சேர்ந்த ஒருவரை கஞ்சா வியாபாரி போல நடிக்க செய்தனர். அவரிடம் ரூ.5 லட்சம் கொடுத்து ஆந்திராவை சேர்ந்த முக்கிய வியாபாரியிடம் கஞ்சா விற்பனைக்கு வேண்டும் என கேட்க செய்தனர். தற்போது அவர் மூலமாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
மூளையாக செயல்பட்ட நபர்
கைது செய்யப்பட்ட நபர்களிடம் கஞ்சாவை எங்கு வாங்குகிறார்கள்? என்று ரகசியமாக விசாரணை செய்ததில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த சந்திரமோகன் என்பவர் இந்த கடத்தலில் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. எனவே அவரையும், ஆந்திராவில் இருந்து கஞ்சா வினியோகம் செய்த நபரையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இதுபோன்ற சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்து, 340 கிலோ கஞ்சா மற்றும் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வெகுவாக பாராட்டினார்.

மேலும் செய்திகள்