திருவாரூர் மாவட்டத்தில் இடைவிடாத மழையால் வீடுகள், வயல்களை சூழ்ந்து நிற்கும் தண்ணீர் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

திருவாரூர் மாவட்டத்தில் இடைவிடாத மழையால் வீடுகள், வயல்களை தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது. இன்று (திங்கட்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-11-28 16:59 GMT
திருவாரூர்:-

திருவாரூர் மாவட்டத்தில் இடைவிடாத மழையால் வீடுகள், வயல்களை தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது. இன்று (திங்கட்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இடைவிடாத மழை

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையினால் சாலைகள் சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகி வருகின்றனர். கட்டுமான பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் மழையால் முடங்கி கிடப்பதால் அன்றாடம் வேலைக்கு சென்று வருவாய் ஈட்டி வரும் தொழிலாளர்கள் வருமானம் இழந்து தவித்து வருகிறார்கள். தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில் நேற்று காலை முதல் தொடர்ந்து பல மணிநேரம் மழை பெய்தது. தொடர் மழை காரணமாக திருவாரூர் புதுத்தெரு மயிலாடுதுறை சாலை பகுதியில் ஆபத்தான மிகப்பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த பள்ளங்களில் மழை நீர் தேங்கி நிற்பதால், இருசக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கி வருகின்றன. அபாய பள்ளங்களை மூட நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தொற்று நோய் பரவும் அபாயம்

கனமழையினால் திருவாரூர் நகரில் ஆத்தா குளம், பனகல் சாலை அருகில் உள்ள குடியிருப்பு பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. மழை நீடிப்பதால் வீடுகளை சூழ்ந்த தண்ணீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மழைநீருடன் கழிவுநீரும் கலந்து இருப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். 
திருவாரூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 32 ஆயிரத்து 800 ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி, 1 லட்சத்து 37 ஆயிரத்து 360 ஏக்கர் தாளடி சாகுபடி என மொத்தம் 3 லட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. 

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

இந்த நிலையில் கனமழை பெய்து வருவதால் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. ஆறுகள், வாய்க்கால்களிலும் தண்ணீர் நிரம்பி செல்வதால் வயல்களில இருந்து தண்ணீர் வடிய வாய்ப்பு இன்றி விவசாயிகள் பரிதவித்து வருகிறார்கள். தொடர் மழையால் மாவட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி இளம் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் சோகத்தில் உள்ளனர்.
கனமழை பெய்து வருவதால் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் இன்று (திங்கட்கிழமை) விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் கயாத்ரி கிருஷ்ணன் நேற்று உத்தரவிட்டார். 

மேலும் செய்திகள்