தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்
நெல்லை பாளையங்கோட்டை யூனியன் தருவை பஞ்சாயத்து குபேரன் நகரில் சமீபத்தில் பெய்த மழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. அங்குள்ள பெட்டைகுளம் நிரம்பியதால், கரை உடையும் அபாயம் உள்ளது. எனவே குளத்தின் தண்ணீரை கண்காணித்து முறையாக வெளியேற்ற வேண்டும். குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளத்தையும் வடிய வைக்க வேண்டும்.
பிரபாகரன், குபேரன்நகர்.
வாறுகால் வசதி தேவை
அம்பை அருகே வாகைகுளம் பேச்சியம்மன் கோவில் தெருவில் வாறுகால் வசதி இல்லாததால், மழைநீர் வடிந்து செல்லாமல் தெருவில் குளம் போல் தேங்குகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அங்கு வாறுகால் வசதி அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
தங்கராஜ், வாகைகுளம்.
சுகாதாரக்கேடு
நெல்லை டவுன் மாடத்தெருவில் வாறுகாலில் அடைப்புகள் உள்ளன. இதனால் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. அங்கு சாலையோரம் பதிப்பதற்காக வைக்கப்பட்ட குடிநீர் குழாய்களும் மழைநீரில் அடித்து செல்லப்பட்டு சாலையில் கிடப்பதால் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே வாறுகால் அடைப்பை அகற்றவும், குடிநீர் குழாய்களை முறையாக பதிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ஈசான ஆறுமுகம், நெல்லை டவுன்.
மின்கம்பத்தை சூழ்ந்த மரக்கிளைகள்
மூலைக்கரைப்பட்டி அருகே கல்லத்தி பஸ் நிறுத்தம் அருகில் உள்ள மின்கம்பத்தைச் சுற்றிலும் மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் மின்விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மரக்கிளைகளை அகற்றுவதுடன், மின்விபத்து ஏற்படாதவாறு உயர் அழுத்த மின்கம்பிகளில் பிளாஸ்டிக் குழாய் பொருத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
மணிகண்டன், கல்லத்தி.
குண்டும், குழியுமான சாலை
தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் திருமலையப்பபுரம் விலக்கில் இருந்து மாலிக் நகர் வரையிலும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை முழுவதும் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். அடிக்கடி வாகன விபத்துகளும் ஏற்படுகிறது. பழுதடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருக்குமரன், கடையம்.
நூலகம் முன்பு குவிந்த குப்பைகள்
கடையநல்லூா் அருகே உள்ள இடைகால் அரசு நூலகத்தின் முன்பு தண்ணீர் தொட்டி அருகில் சிலர் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் அங்கு கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை முறையாக அகற்றவும், மாற்று இடத்தில் குப்பைத்தொட்டி வைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
முத்துராஜ், இடைகால்.
பழுதடைந்த மின்கம்பம்
திருவேங்கடம் அருகே சத்திரகொண்டான் மெயின் ரோடு ஆசாரிகுடியிருப்பு பகுதியில் உள்ள மின்கம்பம் பழுதடைந்த நிலையில் உள்ளது. அதனை அகற்றி விட்டு, புதிய மின்கம்பம் அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
செல்வம், சத்திரகொண்டான்.
ஒளிராத தெருவிளக்குகள்
கடையம் சுடலைமாட சுவாமி கோவிலில் இருந்து முதலியார்பட்டி வரையிலும் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. அங்கு தெருவிளக்குகளும் சரியாக எரிவதில்லை. அந்த சாலையை சீரமைத்து, தெருவிளக்குகள் ஒளிர்வதற்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முகம்மது இப்ராகிம், முதலியார்பட்டி.
பஸ் இயக்கப்படுமா?
தென்காசியில் இருந்து பாம்புகோவில் சந்தை வழியாக கோவில்பட்டிக்கு காலை நேரத்தில் இயக்கப்பட்ட பஸ் கடந்த சில மாதங்களாக இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். அந்த வழித்தடத்தில் அரசு பஸ் இயக்குவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
தங்கம், இடைகால்.
வடியாத வெள்ளம்
தொடர் மழை காரணமாக, தூத்துக்குடி அருகே எம்.சவேரியார்புரம் அம்மா உணவகம் பின்புறம் வீடுகளைச் சுற்றிலும் வெள்ளம் தேங்கியது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். தண்ணீரை வடிய வைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
வனிதா, எம்.சவேரியார்புரம்.