உடன்குடி அருகே வறண்டு கிடந்த தாங்கைகுளத்துக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது
உடன்குடி அருகே வறண்டு கிடந்த தாங்கைகுளத்துக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது
உடன்குடி:
உடன்குடி அருகே வறண்டு கிடந்த தாங்கைகுளத்துக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் சுற்றுவட்டாரத்திலுள்ள குளங்களும் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விவசாயிகள் கோரிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளப்பாதிப்புகள் அதிகம் இருந்தபோதிலும், உடன்குடி பகுதியிலுள்ள குளம், குட்டைகள் தண்ணீர் வரத்து இன்றி வறண்டு கிடந்தன. இந்த குளங்களுக்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடன்குடி வட்டார விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும், ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து தாமிரபரணி ஆற்றில் வீணாக கடலுக்கு திறந்து விடப்படும் பல ஆயிரம் கனஅடி தண்ணீரை இப்பகுதிக்கு திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்-அமைச்சர், அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
தண்ணீர் வரத்து
இதற்கிடையில் மழைக்காலத்துக்கு முன்பே உடன்குடி வட்டார பகுதியில் உள்ள அம்பாள்குளம், பருத்திகொட்டை குளம், நரிக்குளம், மாநாட்சி குளம், குண்டான்கரை குளம், சிறுகுளம், இடையன்குளம் ஆகியன சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின்பு தூர்வாரப்பட்டு முழுமையாக சுத்தப்படுத்தப்பட்டு இருந்தன. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக சடையன்நேரி குளம், தாங்கைகுளம், தருவைகுளம் உட்பட 20-க்கும் மேற்பட்ட குளங்களுக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அனைத்து குளங்களும், குட்டைகளும் சில நாட்களில் முழுமையாக நிரப்பி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விவசாயிகள் மகிழ்ச்சி
உடன்குடி பகுதியில் உள்ள அனைத்து குளங்களும், குட்டைகளும் முழுமையாக நிரம்பி வருவது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.