திருச்செந்தூரில் மோட்டார் சைக்கிளில் இருந்த ரூ.1.89லட்சம் திருடப்பட்டது
திருச்செந்தூரில் மோட்டார் சைக்கிளில் இருந்த ரூ1 லட்சத்து 89 ஆயிரம் திருடப்பட்டது
திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் பெண்ணின் கவனத்தை திசை திருப்பி மேட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டு இருந்த ரூ.1.89 லட்சத்தை திருடி சென்ற 2 மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
நகை அடமானம்
திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டினம் முத்துநகரை சேர்ந்த ஈஸ்வரன் மகன் மணிகண்டன் (வயது 37). இவர் டிஜிட்டல் போர்டு செய்யும் தொழில் செய்து வருகிறார்.
கடந்த 26-ந் தேதி திருச்செந்தூர் வடக்கு ரதவீதியில் உள்ள ஒரு வங்கியில், தாயார் இசக்கியம்மாள் பெயரில் தங்க நகையை அடமானம் வைத்து ரூ.1 லட்சத்து 89 ஆயிரம் பெற்றுக்கொண்டு வங்கியில் இருந்து வெளியே வந்தார்.
கடையில் பழம் வாங்கினார்
பின்னர் தனது மோட்டார் சைக்கிள் டேங் கவரில் பணத்தை வைத்து விட்டு, தாயாருடன் அந்த பகுதியில் உள்ள பழக்கடைக்கு சென்றார். அங்கு மோட்டார் ைசக்கிள் அருகில் தாயாரை நிறுத்திவிட்டு, கடைக்கு சென்று பழம் வாங்கி விட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் பார்த்தபோது மோட்டார் சைக்கிள் டேங் கவரில் வைத்திருந்த பணத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் பல இடங்களிலும் தேடியும் பணம் கிடைக்கவில்லை.
கவனத்தை திசை திருப்பி கைவரிசை
பின்னர் பழக்கடையின் எதிரில் உள்ள ஒரு கடையின் கண்காணிப்பு கேமராவை பார்த்துள்ளார். அதில், அவர் பழம் வாங்கும் போது 2 மர்ம நபர்கள் வந்துள்ளனர். அதில் ஒருவர் தாயார் அருகில் சென்று பஸ்நிலையத்திற்கு வழி கேட்டுள்ளனர். மற்றொரு நபர் மோட்டார் சைக்கிளில் இருந்த பணப்பையை எடுத்துக் கொள்ள, பின்னர் இருவரும் வேகமாக அந்த பகுதியில் இருந்து செல்வதும் பதிவாகி இருந்தது.
இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் திருச்செந்தூர் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் இருந்த பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.