நாடுகாணி-மலப்புரம் சாலையை புதுப்பிக்க ரூ.2½ கோடி ஒதுக்கீடு

போராட்ட அறிவிப்பு எதிரொலியாக நாடுகாணி-மலப்புரம் சாலையை புதுப்பிக்க ரூ.2½ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக பொதுமக்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2021-11-28 13:43 GMT
கூடலூர்

போராட்ட அறிவிப்பு எதிரொலியாக நாடுகாணி-மலப்புரம் சாலையை புதுப்பிக்க ரூ.2½ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக பொதுமக்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

குண்டும், குழியுமான சாலை

கூடலூரில் இருந்து மரப்பாலம், நாடுகாணி, கீழ்நாடுகாணி வழியாக கேரள மாநிலம் மலப்புரம், பாலக்காடு, பெருந்தல்மன்னா, திருச்சூர், கோட்டயம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சாலை செல்கிறது. இதில் கீழ்நாடுகாணியில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்தில் கேரளா எல்லை தொடங்குகிறது. இந்த நிலையில் நாடுகாணியில் இருந்து கேரள எல்லை வரையிலான சாலை மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. 

இதனால் வாகனங்கள் பல்வேறு சிரமங்களுக்கிடையே இயக்கப்படுகிறது. தொடர்ந்து விபத்துகளும் அதிகரித்து வருகிறது. இதனால் குண்டும், குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்க வேண்டும் என்று கீழ்நாடுகாணி, நாடுகாணி, தேவாலா பகுதி மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும் கூடலூர் பகுதியில் பல மாதங்களாக பருவமழை பெய்து வருவதால் நாளுக்கு நாள் சாலை மிக மோசமடைந்து வருகிறது.

பேச்சுவார்த்தை

இதற்கிடையில் நாடுகாணியில் இருந்து கேரள எல்லை வரை குண்டும் குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்கக்கோரி நாடுகாணி, தேவாலா பகுதி மக்கள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதன் எதிரொலியாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேற்று கிராம மக்களின் பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முதற்கட்டமாக வாகன போக்குவரத்துக்கு சிரமம் இல்லாமல் இருக்க சாலைகளில் உள்ள குழிகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து மழைக்காலம் முடிவடைந்தவுடன் சாலையை புதுப்பிக்கும் பணி தொடங்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனால் போராட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக தெரிவித்தனர்.

நுழைவு வரி வசூலிக்கக்கூடாது 

இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:-
கடந்த பல ஆண்டுகளாக நாடுகாணி சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது. இதை அறிந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில், சாலையை புதுப்பிப்பதற்காக ரூ.2½ கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர். இதனால் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் சாலையை புதுப்பிக்கும் பணி தொடங்கும்வரை மாநில எல்லையில் வாகனங்களுக்கு நுழைவு வரி வசூலிக்க கூடாது என்று கேட்டுக்கொண்டோம். மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்