இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

கோத்தகிரி பகுதியில் இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2021-11-28 13:42 GMT
கோத்தகிரி

கோத்தகிரி பகுதியில் இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

இல்லம் தேடி கல்வி திட்டம்

தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து கலைக்குழு மூலம் அனைத்து இடங்களிலும் விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்தில் 3-வது கட்டமாக மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் நாசரூதின் அறிவுரைப்படியும், சமக்ரா சிக் ஷா திட்ட உதவி அலுவலர் குமார் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோரின் வழிகாட்டுதல்படியும் 5 கலைக்குழுக்கள் மூலம் கிராமங்கள் தோறும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கலைக்குழு

இந்த நிலையில் கோத்தகிரி பகுதியில் வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜ்குமார் மற்றும் சென்னையில் கருத்தாளர் பயிற்சி பெற்று வந்த குண்டாடா அரசு பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன், மாவட்ட கருத்தாளர்கள் ஆனந்தன், ஹேரி உத்தம் சிங் ஆகியோரின் ஒருங்கிணைப்பிலும், நேரு யுவ கேந்திரா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து தலைமையிலும் இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு பயணத்தை கலைக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.  

விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோத்தகிரி அருகே உள்ள ஜக்கனாரை கிராமத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. நாடகங்கள், பாடல்கள், கரகாட்டம், ஒயிலாட்டம், பறையாட்டம் மூலமாக திட்டத்தின் நோக்கங்களான கற்றல் இழப்பு, கற்றல் இடைவெளி, இடைநிற்றலை தடுத்தல், கற்றல் வலுவூட்டல் ஆகியன குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 

மேலும் திட்டத்தை செயல்படுத்தக்கூடிய தன்னர்வலர்கள் கவுரவிக்கபட்டனர். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்