கரடிகள் நடமாட்டம் அதிகரிப்பு
கோத்தகிரி பகுதியில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அவற்றை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
கோத்தகிரி
கோத்தகிரி பகுதியில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அவற்றை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
நடமாட்டம் அதிகரிப்பு
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டெருமை, கரடி, சிறுத்தைப்புலி, காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. வனப்பகுதியில் இருந்து உணவு தேடி வெளியே வரும் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விடுகின்றன.
இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோத்தகிரி மிஷன் காம்பவுண்ட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை வளாகத்தில் காலை மற்றும் மாலை நேரத்தில் கரடி ஒன்று உலா வந்தது. இதை கண்டு அச்சமடைந்த நோயாளிகளும், மருத்துவமனை பணியாளர்களும் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
வீட்டின் முன்பு கரடி
இதேபோன்று கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் கூக்கல் தொரை பகுதியில் உள்ள வீட்டிற்குள் தனது முதுகில் 2 குட்டிகளை சுமந்தவாறு தாய் கரடி நுழைய முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தற்போது நேற்று முன்தினம் இரவு கோத்தகிரி மிஷன் காம்பவுண்ட் பகுதியில் சாலையோரத்தில் உள்ள வீட்டின் முன் கரடி ஒன்று நின்று கொண்டு இருந்தது. இதை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கண்டு அச்சமடைந்தனர். அவர்களை கண்ட கரடி அங்கிருந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. அந்த கரடி தொடர்ந்து அதே பகுதியில் உலா வருவதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்து உள்ளனர்.
கூண்டு வைத்து...
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
கோத்தகிரி பகுதியில் ஏராளமான குடியிருப்புகள், பள்ளிகள், அலுவலகங்கள் உள்ளிட்டவை அமைந்து உள்ளன. இங்கு பகல் மற்றும் இரவு நேரங்களில் உலா வரும் கரடிகளால் பொதுமக்களுக்கும், மாணவ-மாணவிகளுக்கும் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே வனத்துறையினர் ஊருக்குள் வரும் கரடிகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.