தமிழக அரசு கேட்ட வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க கே.எஸ்.அழகிரி கோரிக்கை
தமிழக அரசு கேட்ட வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று வேலூரில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
வேலூர்
தமிழக அரசு கேட்ட வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று வேலூரில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
வேலூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தவறான கொள்கை முடிவு
பா.ஜனதா அரசின் தவறான கொள்கையால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. அதனால் அனைத்து குடும்பங்களும் தவித்து வருகிறது. இதனை எடுத்துரைக்கும் வகையில் காங்கிரஸ் சார்பில் தமிழகம் முழுவதும் மக்கள் விழிப்புணர்வு பிரசார நடைபயணம் நடத்தப்பட்டு வருகிறது. 3 வேளாண் சட்டங்கள் வேண்டாம் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தபோது அதை காதில் வாங்காத பா.ஜனதா அரசு வடமாநிலங்களில் நடந்த இடைத்தேர்தலில் தோல்வி அடைந்ததால் அந்த 3 சட்டங்களையும் திரும்ப பெற்றுள்ளது சந்தர்ப்பவாத நடவடிக்கை ஆகும்.
நாட்டின் பண மதிப்பிழப்பின்போது ஜி.டி.பி. 1½ சதவீதமாக குறையும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கூறினார். ஆனால் தற்போது ஜி.டி.பி. 2 சதவீதமாக குறைந்துள்ளது. இதற்கு மோடி அரசின் தவறான கொள்கை முடிவுதான் காரணம். காங்கிரஸ் காலத்தில் கச்சா எண்ணெய் டாலர் ரூ.108-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மத்திய அரசு பெட்ரோலை ரூ.30-க்கு விற்பனை செய்யலாம். ஆனால் மத்திய அரசு அவ்வாறு செய்யவில்லை. அனைத்திற்கும் வரியை ஏற்றி பெட்ரோலை உயர்த்தி விற்பனை செய்து வருகின்றனர்.
வெள்ள நிவாரண நிதி
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் விருப்பம் இருந்தால் மாநிலங்கள் நீட் தேர்வை நடத்திக்கொள்ளலாம் என்று தெரிவித்தோம். ஆனால் கட்டாயப்படுத்தவில்லை. தற்போது மத்திய அரசு அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வை கட்டாயமாக்கி உள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுக்க தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பொதுமக்களும் இதனை வரவேற்று இருக்கிறார்கள்.
தொடர் மழையால் தமிழகம் பெரும் சேதத்தை சந்தித்து இருக்கிறது. எனவே தமிழக அரசு கேட்ட வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை பா.ஜனதா அரசுதான் உயர்த்தியது. தற்போது அவர்களே ஆர்ப்பாட்டம் நடத்துவது தவறான நடவடிக்கை.
காங்கிரசுக்கு குறைந்தளவு இடங்கள்
விவசாய கழிவுகளை எரித்தால் அது குற்றமல்ல என மத்திய அரசு அறிவித்திருப்பது தவறான முன்னுதாரணம். அப்படி செய்தால் காற்றில் உள்ள மாசு அளவு அதிகரிக்கும். எனவே தென் மாநிலங்களில் உள்ள நடைமுறையை வடமாநிலங்களிலும் பின்பற்ற விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். விவசாய நிலங்களில் விவசாய கழிவுகளை எரிப்பதால் நிலங்களில் உள்ள நுண்ணுயிரிகள் அனைத்தும் அழிந்துவிடும்.
பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தை காரணம் காட்டி கட்டுமான பொருட்களின் விலை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு குறைந்தளவு இடங்களே ஒதுக்குகிறார்கள். இது வருந்தத்தக்க விஷயம் தான். இதற்கு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.