உப்பாறு அணையில் இருந்து உபரி நீர் திறப்பு
உப்பாறு அணையில் இருந்து உபரி நீர் திறப்பு
குண்டடம் அருகே உள்ள உப்பாறு அணை 15 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது. இதனால் உபரி நீர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உப்பாறு அணை
குண்டடம் அருகேயுள்ள உப்பாறு அணையின் முழு கொள்ளளவு 24 அடியாகும். கடந்த ஒரு மாதமாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்ததால் உப்பாறுக்கு நீர்வரத்து அதிகமானது. மேலும் பி.ஏ.பி. தண்ணீரும் விடப்பட்டதால் அணை வேகமாக நிரம்பி வந்தது.
அதன் முழு கொள்ளளவான 24 அடியை நேற்று முன்தினம் இரவு எட்டியது. அத்துடன் வினாடிக்கு 481 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
உப்பாறு பாசன பகுதிகளிலும் கனமழையால் தண்ணீர் ஊற்றெடுத்துள்ளது. இதனால் தற்போதைக்கு தண்ணீர் தேவை இல்லை. இதையடுத்து உபரி நீரை ஆற்றில் திறந்து விட முடிவு செய்யப்பட்டது. அதன்படி மதகு வழியாக நேற்று முன்தினம் இரவு 9.15 மணிக்கு வினாடிக்கு 150 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
உபரி நீர் திறப்பு
கடந்த 2005ம் ஆண்டுக்கு பிறகு அணை தனது முழு கொள்ளளவை இந்த ஆண்டுதான் அடைந்துள்ளது. இதனால் கடந்த 4 நாட்களாக குண்டடம், தாராபுரம் பகுதிகளைச்சேர்ந்த பொதுமக்கள் திரளாக வந்து அணையை பார்த்து வருகின்றனர். அணையிலிருந்து உபரிநீர் திறக்கப்படும் தகவல் அறிந்த பொதுமக்கள் பெய்து கொண்டிருந்த சாரல் மழையையும் பொருட்படுத்தாமல் வந்து நீர் திறக்கப்பட்டு ஆற்றில் பாய்ந்த காட்சியைக்கண்டு ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர். மேலும் உபரி நீர் திறக்கப்பட்ட வீடியோ காட்சியை இளைஞர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து மகிழ்ந்து வருகின்றனர்.