உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், தரமான கொப்பரை உற்பத்தி செய்வதற்கு நவீன எந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.
தென்னை சாகுபடி
உடுமலை மற்றும் மடத்துக்குளம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தென்னை சாகுபடி அதிக அளவில் உள்ளது. தேங்காய்கள் நேரடியாகவும், களங்கள் அமைத்து கொப்பரையாக தரம் உயர்த்தியும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக உடுமலை சுற்றுவட்டாரப்பகுதிகளில் கொப்பரை உற்பத்தி செய்வதற்கான உலர்களங்கள் ஏறாளமாக உள்ளன. தேங்காய்கள் உடைக்கப்பட்டு இந்த உலர் களங்களில் காயவைக்கப்படுகிறது.
அதன் பிறகு ஓடு நீக்கப்பட்டு தேங்காயை மட்டும் சிறிதாக நறுக்கி களங்களில் காயவைக்கப்படுகிறது. நன்றாக வெயில் அடித்தால், முதல் தரமான கொப்பரை உற்பத்தி செய்வதற்கு 5 நாட்கள் தேவைப்படுகிறது. மேகமூட்டமாக இருந்தாலும், வெயில் குறைவாக இருந்தாலும் கொப்பரை உற்பத்தி செய்வதற்கு கால தாமதமாகும். தற்போது மழை பெய்து வருவதால் உலர் களங்களில் காய வைக்க முடியாமல் கொப்பரை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
நவீன எந்திரம்
இந்த நிலையில் மழைக்காலத்திலும் கொப்பரை உற்பத்தி செய்யும் வகையில், உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தற்போது நவீன கொப்பரை உற்பத்தி எந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே நாளில் தரமான கொப்பரை உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்காக 2 கலன்கள் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கலனும் தேங்காயில் இருந்து தலா 10 ஆயிரம் கொப்பரை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாகும்.
முதலில் அங்கு சக்கர அமைப்பில் உள்ள எந்திரத்தில் முழுத்தேங்காய்களை ஒவ்வொன்றாக வைக்க வேண்டும். அந்த தேங்காய் அந்த எந்திரத்தில் உள்ள கத்தியால் 2 துண்டுகளாக வெட்டப்பட்டு வெளியே வரும். தேங்காய் தண்ணீர் கீழே சென்று விடும். இந்த சக்கர எந்திரம் மெதுவாக சுற்றிக்கொண்டிருப்பதால் அதில் அடுத்தடுத்து தேங்காய்களை வைத்துக்கொண்டே இருக்கலாம். இவ்வாறு 2 துண்டுகளாக உடைக்கப்பட்ட தேங்காய்கள் அங்குள்ள 2 கலன்களில் போடப்படுகின்றன. அந்த கலன்களுக்கு விறகு, தேங்காய் தொட்டி, பண்ணைக்கழிவுகள் ஆகியவற்றை எரித்து அதன் மூலம் உண்டாகும் வெப்பம் அந்த கலன்களின் கீழ் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு ஏற்றப்படுகிறது.
தரமான கொப்பரை உற்பத்தி
அந்த வெப்பம் மூலம், கலனில் தட்டின் மேல்பகுதியில் பரப்பி வைக்கப்பட்டுள்ள தேங்காய்கள் 6 மணி நேரம் காய்ந்து ஈரப்பதம் குறைந்ததும் அவை வெளியே எடுக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து அந்த தேங்காய் ஓட்டை லேசாக தட்டினால் கொப்பரையில் இருந்து ஓடுவிடுபடும். அப்போது சிறிய கத்தியால் தேங்காயில் உள்ள கொப்பரை தனியாக பிரித்தெடுக்கப்படுகிறது.
இதன் மூலம் கொப்பரை உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த கொப்பரை மீண்டும் அந்த கலனில் பரப்பி வைக்கப்பட்டு உலரவைக்கப்பட்டு தரமான கொப்பரை உற்பத்தி செய்யப்படுகிறது.
விவசாயிகளுக்கு அழைப்பு
இதுகுறித்து உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சரவணன் கூறியதாவது:-
உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், நவீன முறையில் தரமான கொப்பரை உற்பத்தி செய்யும் எந்திரங்கள் நிறுவப்பட்டு கட்டமைப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மழைக்காலத்திலும் தரமான கொப்பரை உற்பத்தி செய்ய முடியும். இதை விவசாயிகளே நேரடியாக செய்து கொள்கின்றனர். இதற்கு விவசாயிகளிடம் கட்டணம் வசூலிப்பதில்லை. உற்பத்தி செய்யப்பட்ட கொப்பரை, ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் விற்பனை செய்யும் வசதியும், போதிய விலை கிடைக்கும் வரை இருப்பு வைத்துக்கொள்ளும் வகையில் குடோன் வசதியும் உள்ளது. விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில், ரூ.3 லட்சம் வரை பொருளீட்டுக்கடனும் வழங்கப்படுகிறது. அதனால் விவசாயிகள் தரமான கொப்பரை உற்பத்தி செய்வதற்கு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் உள்ள நவீன எந்திர கட்டமைப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
==========