தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் குறித்து தகவல் அளித்தால் வெகுமதி
திருவள்ளூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் குறித்து தகவல் அளித்தால் வெகுமதி அளிக்கப்படும் என்று கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். திவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பெரியபாளையம்,
ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை அறிவிப்பை 25.6.2018-ல் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதன் அடிப்படையில், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழி பொருட்களான கோப்பைகள், அனைத்து அளவிலான மற்றும் தடிமன் கொண்ட பிளாஸ்டிக் கைப்பைகள், நெய்யப்படாத கைப்பைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், டம்ளர்கள், தெர்மாகோல் கோப்பைகள், உணவு பொருட்களை கட்ட பயன்படுத்தப்படும் தாள்கள், தண்ணீர் பைகள், பாக்கெட்டுகள், உறிஞ்சு குழல்கள் மற்றும் கொடிகள் போன்றவைகளை தயார் செய்து சேமித்து வைப்பதும், வினியோகிப்பதும், விற்பதும், உபயோகிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டு மற்றும் தெற்கு மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் போன்றவை பிளாஸ்டிக் தடையை கடுமையாக அமல்படுத்தியுள்ளது.
மீறுவோருக்கு எதிராக நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. இதற்காக மாசு கட்டுப்பாடு வாரியம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் குடியிருப்பு, வணிக நிறுவனங்களுக்குள் ஒரு சிறிய இடத்தில் சட்டவிரோதமாக செயல்படும் இத்தகைய தடை செய்த பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களை அடையாளம் காண்பதும் கடினமாக உள்ளது. இந்த உற்பத்தியாளர்களில் பெரும்பாலானோர் எந்த அரசு துறைகளிடமும் முறையான பதிவு மற்றும் அனுமதியின்றி தற்காலிகமாக செயல்பட்டு வருகின்றன.
இதுபோன்று தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் குறித்து (https:/ /tnpcb.gov.in/contact.php) என்ற இணையதள முகவரியில் புகார் தெரிவிக்கலாம். இதுபோன்று தகவல் தெரிவிப்போரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு வெகுமதியும் அளிக்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.