திருவள்ளூர் அருகே மழைநீரை அகற்றக்கோரி கிராம மக்கள் மறியல்

திருவள்ளூர் அருகே மழைநீரை அகற்றக்கோரி கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-11-28 10:40 GMT
பெரியபாளையம்,

திருவள்ளூரை அடுத்த தண்ணீர்குளம், ராமாபுரம் கிராமங்களில் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த வடகிழக்கு பருவ மழையால் 500-க்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்தது.

இதனால் குடியிருப்புவாசிகள் பெரிதும் அவதிக்கு உள்ளானார்கள். இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் மழைநீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் மழைநீரை போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து திருவள்ளூர் - ஆவடி நெடுஞ்சாலையில் ராமாபுரம் பஸ் நிறுத்தம் அருகே 100-க்கும் மேற்பட்டோர் திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்த திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தலைமையில் திருவள்ளூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். மழைநீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். இதனை ஏற்றுக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்