கிருஷ்ணகிரி அருகே காலபைரவர் கோவிலில் ஜெயந்தி விழா

கிருஷ்ணகிரி அருகே உள்ள கல்லுக்குறிக்கி காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி ஜெயந்தி விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2021-11-27 22:37 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே உள்ள கல்லுக்குறிக்கி காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி ஜெயந்தி விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பைரவர் ஜெயந்தி விழா
கிருஷ்ணகிரி அருகே கல்லுகுறிக்கி வெங்கடாபுரம் பெரிய ஏரி மேற்கு கோடிக்கரையில் உள்ள காலபைரவர் கோவிலில், 811-ம் ஆண்டு பைரவர் ஜெயந்தி விழா மற்றும் தேய்பிறை அஷ்டமி விழா நேற்று நடந்தது. இதையொட்டி காலை கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், காலபைரவ மகா ஹோமம் நடந்தது. தொடர்ந்து காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடந்தது. பின்னர் காலபைரவர் சாமி உற்சவமும் நடைபெற்றது.
இந்த யாகத்தில் செல்லகுமார் எம்.பி. மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பூசணி மற்றும் தேங்காயில் விளக்கேற்றி வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை, காலபைரவர் சாமி கோவில் அறக்கட்டளை மற்றும் குலதெய்வமாக வழிபடும், 165 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் செய்திருந்தனர்.
 தட்சண காலபைரவர் 
இதேபோல், கிருஷ்ணகிரி அடுத்த சூரன்குட்டை தட்சண காலபைரவர் கோவில் மற்றும் கந்திகுப்பம் காலபைரவர் கோவில்களில் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்