தேன்கனிக்கோட்டை அருகே விவசாய நிலத்தில் சுற்றித்திரியும் காட்டுயானை கிராமமக்கள் பீதி

தேன்கனிக்கோட்டை அருகே விவசாய நிலத்தில் காட்டுயானை ஒன்று சுற்றித்திரிவதால் கிராமமக்கள் பீதி அடைந்தனர்.

Update: 2021-11-27 22:37 GMT
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே விவசாய நிலத்தில் காட்டுயானை ஒன்று சுற்றித்திரிவதால் கிராமமக்கள் பீதி அடைந்தனர்.
காட்டுயானை
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தாவரக்கரை வனப்பகுதியை ஒட்டியுள்ள மலசோனை பகுதிகளில் ஒற்றை காட்டுயானை கடந்த சில நாட்களாக சுற்றித்திரிந்து வருகிறது. நேற்று முன்தினம் இந்த காட்டுயானை அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் சுற்றித்திரிந்தது. இதனால் கிராமமக்கள் பீதி அடைந்தனர்.
இதுகுறித்து அவர்கள் தேன்கனிக்கோட்டை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினர் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியோடு பட்டாசுகள் வெடித்தும், தாரை தப்பட்டை அடித்தும் காட்டுயானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதையடுத்து அந்த யானை வனப்பகுதிக்கு சென்றது.
 கோரிக்கை
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், மலசோனை பகுதிகளில் காட்டுயானைகள் சுற்றித்திரிவதால் கிராமமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். காட்டுயானை இருக்கும் இடத்தில் கிராமமக்கள் செல்பி மற்றும் போட்டோக்களை எடுக்கக்கூடாது என்று அறிவுறுத்தினர். 
விவசாய நிலங்களில் இரவு நேரத்தில் சுற்றித்திரியும் காட்டுயானையை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்