கர்நாடக மேல்-சபை தோ்தலில் பா.ஜனதாவுக்கு, ஜனதாதளம்(எஸ்) கட்சி ஆதரவு வழங்கும் - எடியூரப்பா நம்பிக்கை
கர்நாடக மேல்-சபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு, ஜனதாதளம்(எஸ்) கட்சி ஆதரவு வழங்கும் என்று முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
பெங்களூருவில் நேற்று முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
15 தொகுதிகளில் வெற்றி
கர்நாடக மேல்-சபையில் காலியாக உள்ள 25 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் பா.ஜனதா 20 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. இந்த 20 தொகுதிகளில் 15 இடங்களில் பா.ஜனதா வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதற்கான பணிகளில் பா.ஜனதா தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். நான் சாகர், ஒன்னாளி உள்ளிட்ட பகுதிகளுக்கு நாளை(அதாவது இன்று) சென்று பிரசாரம் செய்ய இருக்கிறேன்.
இந்த தேர்தலில் பா.ஜனதாவுக்கு மக்கள் பிரதிநிதிகளிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது. பா.ஜனதா சார்பில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டங்களில் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு வருகிறார்கள். 15 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற்றால், மேல்-சபையில் தனிப்பெரும்பான்மை கிடைக்கும். எந்த பிரச்சினையும் இன்றி மேல்-சபையை நடத்த முடியும்.
ஜனதாதளம் (எஸ்) ஆதரவு
15 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான அனைத்து வியூகங்களும் வகுக்கப்பட்டு இருக்கிறது. நான் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் வெற்றிக்காக உழைத்து வருகிறோம். மேல்-சபை தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) சில தொகுதிகளில் மட்டுமே வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. பல தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தவில்லை.
ஜனதாதளம்(எஸ்) கட்சி போட்டியிடாத தொகுதிகளில் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளேன். இதுதொடர்பாக குமாரசாமியுடன் எந்த ஆலோசனையும் நடத்தவில்லை. என்றாலும், ஜனதாதளம்(எஸ்) கட்சி போட்டியிடாத தொகுதிகளில் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.