ஈரோட்டில் மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி; 64 அணிகள் பங்கேற்பு
ஈரோட்டில் நடந்த மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டியில் 64 அணிகள் கலந்து கொண்டன.
ஈரோடு
ஈரோட்டில் நடந்த மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டியில் 64 அணிகள் கலந்து கொண்டன.
ஜவர் கால்பந்து போட்டி
ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில், ஈரோடு மாவட்ட கால்பந்து கழகம் மற்றும் ஈரோடு ஸ்டிரைக்கர் கால்பந்து குழு சார்பில் மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நேற்று தொடங்கியது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட விளையாட்டு அதிகாரி சதீஷ்குமார் தலைமை தாங்கினார்.
ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஈரோடு அரசு மாணவிகள் விளையாட்டு விடுதி கால்பந்து பயிற்சியாளர் சத்யா, தடகள பயற்சியாளர் கண்மணி உள்பட பலர் கலந்து கொண்டார்கள். இதில், ஈரோடு, சென்னை, தூத்துக்குடி, சேலம், கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கால்பந்தாட்ட வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
பரிசளிப்பு விழா
இந்த போட்டியில் மொத்தம் 64 அணிகள் பங்கேற்றுள்ளன. போட்டிகள் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) தொடர்ந்து நடக்கிறது. மேலும் பெண்கள் அணியினர் பங்கேற்கும் கால்பந்தாட்ட போட்டியும் இன்று நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து மாலையில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடக்கிறது.
முதல் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.12 ஆயிரத்து 1, பரிசுக்கோப்பை மற்றும் பதக்கமும், 2-ம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.8 ஆயிரத்து 1 பரிசுக்கோப்பை மற்றும் பதக்கமும், 3-ம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.5 ஆயிரத்து 1 மற்றும் பரிசுக்கோப்பையும், 4-ம் இடம் பிடிக்கும் அணிக்கு பரிசுக்கோப்பையும் வழங்கப்படுகிறது.