மாவட்ட வேலைவாய்ப்பு துறை சார்பில் ஈரோட்டில் நடந்த தனியார் துறை காலிப்பணியிடங்களுக்கு 1,304 பேர் தேர்வு; 174 நிறுவனங்கள் பங்கேற்பு
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு துறை சார்பில் ஈரோட்டில் நடந்த தனியார் துறை பணியிடங்களுக்கு 1,304 பேர் தேர்வு செய்யப்பட்டனர். 174 தனியார் நிறுவனங்கள் பங்கேற்ற இந்த முகாமை கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்.
ஈரோடு
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு துறை சார்பில் ஈரோட்டில் நடந்த தனியார் துறை பணியிடங்களுக்கு 1,304 பேர் தேர்வு செய்யப்பட்டனர். 174 தனியார் நிறுவனங்கள் பங்கேற்ற இந்த முகாமை கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்.
வேலைவாய்ப்பு முகாம்
ஈரோடு மாவட்ட நிர்வாகம், ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஈரோடு ரங்கம்பாளையத்தில் உள்ள ஈரோடு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது.
முகாமுக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். கல்லூரி தாளாளர் கே.கே.பாலுசாமி, திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
174 நிறுவனங்கள்
முகாமை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பின்னர் தனியார் நிறுவன வேலை அளிப்போரின் அரங்குகள், அரசுத்துறை அரங்குகளை பார்வையிட்டார். தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க கண்காட்சி, இல்லம்தேடி கல்வி திட்ட தன்னார்வலர் பதிவு முகாம் ஆகியவற்றையும் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா ஆகியோர் பார்வையிட்டனர்.
முகாமில் ஈரோடு மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களை சேர்ந்த 174 தனியார் நிறுவன தொழில் முனைவோர்கள் தங்கள் நிறுவனங்கள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளுக்கு ஆட்கள் தேர்வு செய்தனர்.
1,304 பேருக்கு பணி
தனியார் நிறுவனத்தினர் தங்கள் நிறுவனத்துக்கு மொத்தம் தேவையான 16 ஆயிரத்து 640 காலிப்பணியிட பட்டியல் அளித்திருந்தனர். இந்த முகாமில் 3 ஆயிரத்து 463 ஆண்கள், 2 ஆயிரத்து 850 பெண்கள் என மொத்தம் 6 ஆயிரத்து 313 பேர் வேலை தேடி வந்திருந்தனர். இதில் 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் உயர் படிப்பு முடித்தவர்கள் வரை இருந்தனர். கல்வித்தகுதி, அனுபவம் உள்ளிட்டவை அடிப்படையில் வேலை அளிக்கும் நிறுவனத்தினர் நேர்முகத்தேர்வு, எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு என்ற அடிப்படைகளில் ஆட்கள் தேர்வு செய்தனர். மொத்தம் 1,304 பேர் உடனடியாக வேலைகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை கோவை மண்டல இணை இயக்குனர் ஓ.செ.ஞானசேகரன் பணி நியமன உத்தரவு வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் டி.கெட்ஸி லீமா அமலினி உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குனர் ம.மகேஸ்வரி வரவேற்றார். மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி ஜோதி நன்றி கூறினார்.
திறன் பயிற்சி
இந்த முகாமில் 55 ஆண்கள், 13 பெண்கள் என 68 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். இதில் 12 பேர் வேலைகளுக்காக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இது தவிர 457 பேரை அடுத்த கட்ட தேர்வுக்காக நிறுவனங்கள் தேர்வு செய்து உள்ளன.
முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக இலவச பயிற்சிகளுக்கான பதிவுகள், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில் முனைவோர் ஆலோசனை, மாவட்ட முன்னோடி வங்கி மூலம் தொழில்கடன் வழிகாட்டுதல் ஆகியவையும் இந்த முகாமில் வழங்கப்பட்டது. இதற்காக தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. இதன் மூலம் 288 பேர் திறன் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டனர். தொழில்கள் தொடங்க கடன் உதவி கேட்டு மாவட்ட தொழில் மைய அரங்கில் 61 பேர் பதிவு செய்தனர்.
இந்த முகாம் மூலம் தனியார் துறையில் வேலைக்கு அமர்த்தப்படுபவர்களின் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படாது என்று வேலைவாய்ப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.