வெவ்வேறு விபத்துகளில் மின்வாரிய என்ஜினீயர் உள்பட 2 பேர் பலி

நெல்லையில் வெவ்வேறு விபத்துகளில் மின்வாரிய என்ஜினீயர் உள்பட 2 பேர் இறந்தனர்.;

Update: 2021-11-27 19:48 GMT
நெல்லை:
நெல்லையில் வெவ்வேறு விபத்துகளில் மின்வாரிய என்ஜினீயர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

மின்வாரிய என்ஜினீயர்

நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் மூகாம்பிகை நகரைச் சேர்ந்தவர் சசிகுமார் (வயது 57). இவர் மேலப்பாளையம் மின்வாரிய அலுவலகத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு, மாலையில் தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி சென்று கொண்டிருந்தார்.
பாளையங்கோட்ைட மகாராஜ நகர் மாநகராட்சி பூங்கா அருகில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த சசிகுமாரை அக்கம்பக்கத்தினர் காப்பாற்றி சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி சசிகுமார் பரிதாபமாக இறந்தார்.

மற்றொரு சம்பவம்

முக்கூடல் அருகே பாப்பாக்குடி செண்பக விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன் மகன் செல்வம் (23). கட்டிட தொழிலாளியான இவர் சம்பவத்தன்று நெல்லை பகுதியில் வேலை செய்து விட்டு, மோட்டார் சைக்கிளில் தனது வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.
நெல்லை சந்திப்பு உடையார்பட்டி பகுதியில் சென்றபோது, எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளின் மீது எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் பலத்த காயமடைந்த செல்வத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவங்கள் குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்