மூதாட்டியை தாக்கி நகை பறித்தவர் கைது

கொல்லங்கோடு அருகே பட்டப்பகலில் மூதாட்டியை தாக்கி நகையை பறித்து சென்ற ஆசாமியை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

Update: 2021-11-27 19:29 GMT
கொல்லங்கோடு, 
கொல்லங்கோடு அருகே பட்டப்பகலில் மூதாட்டியை தாக்கி நகையை பறித்து சென்ற ஆசாமியை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
நகை பறிப்பு
கொல்லங்கோடு அருகே உள்ள கிராத்தூர் கல்லுப்பொற்றை பகுதியை சேர்ந்தவர் டைசி (வயது 65). இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்தநிலையில் நேற்று காலை 9 மணிக்கு வீட்டு வெளியே நின்ற ஆட்டு குட்டிகளுக்கு தண்ணீர் கொடுத்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு ஆசாமி ஒருவர் வந்தார். பின்னர் திடீரென டைசியை தாக்கி விட்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த 1 பவுன் நகையை பறித்து விட்டு வீட்டின் பின்பக்கம் ஓடினார்.
பரபரப்பு
அங்கு ஏற்கனவே அங்கு தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்று விட்டார். டைசி திருடன், திருடன் என சத்தம் போட்டும் பலனில்லாமல் போனது. 
மேலும் இதுகுறித்து அவர் கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடினர்.
கைது
கொள்ளையனை அடையாளம் காண்பதற்காக தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அந்த காட்சிகளின் அடிப்படையில் நகை பறிப்பில் ஈடுபட்டதாக கேரள மாநிலம் காஞ்சிரம்குளம் பகுதியை சேர்ந்த ஷிபு (வயது 42) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மூதாட்டியின் நகையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.
நகை பறிப்பில் ஈடுபட்ட நபரை ஒரே நாளில் அதிரடியாக கைது செய்த தனிப்படை போலீசாரை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.

மேலும் செய்திகள்