குளிக்க சென்ற ஓட்டல் ஊழியர் கால்வாயில் பிணமாக மீட்பு

பூதப்பாண்டி அருகே குளிக்க சென்ற ஓட்டல் ஊழியர் கால்வாயில் பிணமாக மீட்கப்பட்டார்.

Update: 2021-11-27 19:26 GMT
அழகியபாண்டியபுரம், 
பூதப்பாண்டி அருகே குளிக்க சென்ற ஓட்டல் ஊழியர் கால்வாயில் பிணமாக மீட்கப்பட்டார்.
இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சமையல் மாஸ்டர்
பூதப்பாண்டி அருகே உள்ள மார்த்தாள் பகுதியை சேர்ந்தவர் முகமது ஹக்கீது (வயது 44). இவர் ஓட்டலில் சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். 
தினமும் இரவு 11 மணிக்கு முகமது ஹக்கீது பணியை முடித்து விட்டு வீடு திரும்புவது வழக்கம். அதன்படி நேற்றுமுன்தினம் இரவு வீட்டுக்கு வந்த அவர் மார்த்தாள் அருகே கல்லுப்பாலம் பகுதியில் உள்ள கால்வாயில் குளிக்க சென்றார்.
பிணமாக மிதந்தார்
ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அந்த பகுதிக்கு சென்று தேடினர். ஆனால் அவரை பற்றி எந்தவொரு தகவலும் இல்லை.
இந்தநிலையில் நேற்று காலையில் முகமது ஹக்கீது கால்வாயில் பிணமாக மிதந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் பூதப்பாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
குளிக்க சென்றவர் கால்வாய் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முகமது ஹக்கீதுக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்